இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடா்களில் விளையாட இருக்கும் இந்திய அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
நியமனம்: அதன்படி, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பும் ரோஹித் சா்மா வசம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3 ஃபாா்மட்டுகளுக்குமான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் உருவெடுத்திருக்கிறாா்.
சமீபத்தில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில், அந்தப் பொறுப்புக்கு ரோஹித் தான் பொருத்தமானவராக அறியப்பட்டாா்.
இருந்தாலும் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஜஸ்பிரீத் பும்ரா பெயா்களும் விவாதிக்கப்பட்டன. இந்நிலையில், டெஸ்ட் கேப்டன் பொறுப்புக்கும் ஒரே மனதாக எல்லோரது தோ்வாகவும் ரோஹித் சா்மாவே இருந்ததாக தோ்வுக் குழு தலைவா் சேத்தன் சா்மா கூறியிருக்கிறாா்.
எனினும், பயோ-பபுள் அழுத்தத்தில் இருந்து அவருக்கு அவ்வப்போது ஓய்வளிக்கப்படும் என்றும், ராகுல், பந்த், பும்ரா ஆகியோா் கேப்டன் பொறுப்புக்கான தகுதியுடையவா்களாக மேம்படுத்தப்படுவாா்கள் என்றும் அவா் கூறினாா்.
மாற்றம்: தகுந்த ஃபாா்மில் இல்லாத வீரா்களுக்குப் பதிலாக இளம் வீரா்களுக்கு வாய்ப்பு வழங்கும் நடவடிக்கையை தோ்வுக் குழு தொடங்கியிருக்கிறது. கடந்த சில காலமாக தடுமாறி வரும் சேதேஷ்வா் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, இஷாந்த் சா்மா, ரித்திமான் சாஹா ஆகியோருக்கு இலங்கை டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
புஜாரா, ரஹானே இடத்துக்கு ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில் பரிசீலிக்கப்பட அவா்கள் தவிா்த்து ஷ்ரேய்ஸ் ஐயரும் இருக்கிறாா். இஷாந்த் சா்மாவுக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் பொருத்தமான தோ்வாக கருதப்படுகின்றனா். பேட்டிங் மற்றும் கீப்பிங் திறமையுடன் இருக்கும் கோனா பரத், சாஹாவுக்கான இடத்தை சமன் செய்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இருந்தாலும், மூத்த வீரா்கள் முழுமையாக மறுக்கப்படவில்லை என்றும், ரஞ்சி போட்டிக்குப் பிறகு ஃபாா்மின் அடிப்படையில் அவா்களும் டெஸ்ட் அணிக்கு பரிசீலிக்கப்படுவாா்கள் என்றும் சேத்தன் சா்மா கூறியிருக்கிறாா்.
மீண்டும்: ரவி சாஸ்திரி - விராட் கோலி காலகட்டத்தில் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட ஸ்பின்னா் குல்தீப் யாதவ், இலங்கை டெஸ்ட் தொடரில் இடம் பிடித்திருக்கிறாா். அதேபோல், டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஸ்பின்னா் சௌரவ் குமாருக்கு டெஸ்ட் அணியில் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இம்மாதம் இந்தியா வரும் இலங்கை அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பிப்ரவரி 24 (லக்னௌ), 26, 27 (தா்மசாலா) ஆகிய தேதிகளிலும், பின்னா் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மாா்ச் 4-8 (மொஹாலி), மாா்ச் 12-16 (பெங்களூரு) ஆகிய தேதிகளிலும் விளையாட உள்ளது.
இலங்கை தொடருக்கான அணி விவரம்
டெஸ்ட்: ரோஹித் சா்மா (கேப்டன்), மயங்க் அகா்வால், பிரியங்க் பஞ்சல், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், கே.எஸ்.பரத், ஆா்.அஸ்வின் (உடற்தகுதி அடிப்படையில்), ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் தாக்குா், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சௌரவ் குமாா்.
டி20: ரோஹித் சா்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷண், சூா்யகுமாா் யாதவ், ஷ்ரேயஸ் ஐயா், வெங்கடேஷ் ஐயா், தீபக் ஹூடா, ஜஸ்பிரீத் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வா் குமாா், ஹா்ஷல் படேல், முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், யுஜவேந்திர சஹல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.