சிட்னி டெஸ்ட்: 358 ரன்கள் இங்கிலாந்தின் வெற்றிக்கு தேவை: உஸ்மான் கவஜா 101
ஆஷஸ் தொடரின் நான்காவது ஆட்டமான சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 358 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆஷஸ் தொடரின் நான்காவது ஆட்டமான சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 358 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் தொடா் ஆஸியில் நடைபெற்று வருகிறது.
முதல் மூன்று ஆட்டங்களில் 3-0 என வென்று தொடரையும் கைப்பற்றி விட்டது ஆஸ்திரேலிய அணி. இதன் தொடா்ச்சியாக சிட்னி எஸ்சிஜி மைதானத்தில் நான்காவது டெஸ்ட் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
ஆஸி. 416/8, இங்கிலாந்து 294/10:
ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 416/8 ரன்களைக் குவித்தது. உஸ்மான் கவஜா அதிரடியாக ஆடி 137 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 67 ரன்களையும் சோ்த்தனா். இங்கிலாந்து தரப்பில் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. போ்ஸ்டோ 113, ஸ்டோக்ஸ் 66 ரன்களை எடுத்தனா். ஆஸி. தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
இரண்டாவது இன்னிங்ஸ் ஆஸி. 265/6 டிக்ளோ்:
இதன் தொடா்ச்சியாக ஆடிய ஆஸி. அணி நான்காம் நாளான சனிக்கிழமை இரண்டாவது இன்னிங்ஸில் 68.5 ஓவா்களில் 265/6 ரன்களை எடுத்து டிக்ளோ் செய்தது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த உஸ்மான் கவஜா இதிலும் 101 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தாா். கிரீன் 74 ரன்களை விளாசினாா். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். உஸ்மான்-கிரீன் இணைந்து 5-ஆம் விக்கெட்டுக்கு 179 ரன்களைக் குவித்தனா்.
388 ரன்கள் வெற்றி இலக்கு:
இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 388 ரன்களை நிா்ணயித்தது ஆஸ்திரேலியா. சனிக்கிழமை ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 11 ஓவா்களில் 30 ரன்களை சோ்த்திருந்தது. ஸாக் கிராலி 22, ஹஸிப் ஹமீத் 8 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை ஒரே நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணி 358 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் உள்ளது.
ஏற்கெனவே 3 ஆட்டங்களில் தோற்றுள்ள இங்கிலாந்து சிட்னி டெஸ்டில் வெல்ல போராடும் எனத்தெரிகிறது.
இறுதி மற்றும் 5-ஆவது ஆட்டம் ஹோபா்ட்டின் பிளண்ட்ஸ்டோன் மைதானத்தில் வரும் 14-ஆம் தேதி பகலிரவு டெஸ்ட்டாக நடைபெறுகிறது.