முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பை: நோ-பாலால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா

​தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் மகளிர் உலகக் கோப்பையிலிருந்து இந்திய அணி வெளியேறியது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:48 AM
கோப்புப்படம்
பகிர்:


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் மகளிர் உலகக் கோப்பையிலிருந்து இந்திய அணி வெளியேறியது. 

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.

275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி லிசெல் லீயை 6 ரன்களுக்கு இழந்தது.

இதன்பிறகு, லௌரா வோல்வார்தட் மற்றும் லாலா கூடால் இணை சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நெருக்கடியளித்தது. 2-வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்த நிலையில் கூடால் 49 ரன்களுக்கு ராஜேஸ்வரி கயக்வாட் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே வோல்வார்தட்டும் 80 ரன்களுக்கு ஹர்மன்பிரீத் கௌர் பந்தில் போல்டானார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், தென் ஆப்பிரிக்கா வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் அதிகரித்தது. இதன்பிறகு, மீண்டுமொரு சிறிய பாட்னர்ஷிப் அமைந்தது. ஹர்மன்பிரீத் கௌர் சிறப்பாகப் பந்துவீசி தென் ஆப்பிரிக்கா கேப்டனை ஆட்டமிழக்கச் செய்து இந்த பாட்னர்ஷிப்பையும் பிரித்தார்.

வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் அதிகரித்ததால், தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி அதிகரித்தது. இந்த நெருக்கடியால் மரிசேன் கப் 32 ரன்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

கடைசி 5 ஓவர்களில் 45 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. பூஜா வஸ்தராகர் வீசிய 46-வது ஓவரில் டு ப்ரீயா இரண்டு பவுண்டரிகளையும், கயக்வாட் வீசிய 47-வது ஓவரில் ட்ரியான் 3 பவுண்டரிகளும் விளாச வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் குறைந்தது. எனினும், அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ட்ரியான் ஆட்டமிழந்தது, இந்தியாவுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

தீப்தி சர்மா வீசிய 48-வது ஓவரில் 6 ரன்கள் கிடைக்க, கயக்வாட் வீசிய 49-வது ஓவரிலும் 6 ரன்கள் கிடைத்தன. 

இதனால், கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. 2-வது பந்தில் டு ப்ரீயா இரண்டு ரன்கள் எடுக்க முயல மறுமுனையில் த்ரிஷா செட்டி ரன் அவுட் ஆனார். எனினும், அந்த பந்தில் 1 ரன் கிடைத்தது.

பின்னர் 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அரைசதம் அடித்த டு ப்ரீயா சிக்ஸர் அடிக்க முயன்று பவுண்டரி அருகே ஹர்மன்பிரீத் கௌரிடம் கேட்ச் ஆனார்.

ஆனால், நோ-பால் என நடுவர் அறிவித்ததால், தென் ஆப்பிரிக்காவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அமைந்தது. கடைசிப் பந்தில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில் டு ப்ரீயா பவுண்டரி அடித்து தென் ஆப்பிரிக்காவை வெற்றி பெறச் செய்தார்.

இதன்மூலம், உலகக் கோப்பையிலிருந்து இந்திய மகளிர் அணி வெளியேறியது. 

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.