ஐசிசி போட்டிகளில் நாக் அவுட் சுற்றுகளுக்கு முன்னேறும்போதெல்லாம் எப்படியாவது சறுக்கி கீழே விழுந்து விடுகிறது நியூசிலாந்து அணி. எத்தனை கேப்டன்கள் மாறினாலும் இதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கவில்லை. இந்த வருடமும் இந்தச் சோகக்கதை தொடர்ந்திருக்கிறது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான் அணி.
சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நடப்பு உலக சாம்பியனாக இருக்கும் நியூசிலாந்து அணி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஐசிசி போட்டிகளில் தொடர்ந்து முக்கியமான ஆட்டங்களில் தோற்று வருகிறது. ஒரே ஆறுதலாக 2000-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. மற்றபடி ஐசிசி போட்டிகளில் எப்போதெல்லாம் நாக் அவுட் ஆட்டங்களில் விளையாடுகிறதோ அப்போதெல்லாம் தோற்றுப் போய் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழக்கிறது. 1975-லிருந்து தொடங்கும் இந்தக் கதை 2022-ல் கூட தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து தோற்ற தருணங்கள் (வெள்ளைப் பந்து கிரிக்கெட்)
1975 உலகக் கோப்பை அரையிறுதி: தோல்வி
1979 உலகக் கோப்பை அரையிறுதி: தோல்வி
1992 உலகக் கோப்பை அரையிறுதி: தோல்வி
1996 உலகக் கோப்பை காலிறுதி: தோல்வி
1998 சாம்பியன்ஸ் கோப்பை காலிறுதி: தோல்வி
1999 உலகக் கோப்பை அரையிறுதி: தோல்வி
2000 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச்சுற்று: வெற்றி
2006 சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி: தோல்வி
2007 உலகக் கோப்பை அரையிறுதி: தோல்வி
2007 டி20 உலகக் கோப்பை அரையிறுதி: தோல்வி
2009 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச்சுற்று: தோல்வி
2011 உலகக் கோப்பை அரையிறுதி: தோல்வி
2015 உலகக் கோப்பை இறுதிச்சுற்று: தோல்வி
2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதி: தோல்வி
2019 உலகக் கோப்பை இறுதிச்சுற்று: தோல்வி
2021 டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று: தோல்வி
2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி: தோல்வி
சின்னஞ்சிறிய நாடான நியூசிலாந்து (51 லட்சம் மக்கள் தொகை) கிரிக்கெட்டில் தொடர்ந்து தன்னளவில் சாதித்துக்கொண்டு தான் இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாப் போட்டிகளிலும் அரையிறுதிக்குச் சத்தமில்லாமல் நுழைந்து விடும். ஆனால் என்ன, டெஸ்டில் நடப்பு உலக சாம்பியனாக இருந்தாலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர்களால் இன்னும் ஒரு உலகக் கோப்பையையும் வெல்ல முடியவில்லை. மக்கள் தொகை குறைவு என்பதால் நினைத்த நேரத்தில் புதிய திறமைகளை உருவாக்கவும் முடியாது. இன்னொரு மெக்குல்லம், இன்னொரு பிளெமிங் எல்லாம் கிடைக்க அவர்கள் காத்திருக்கத்தான் வேண்டும். கிரிக்கெட்டை நேர்மையாக, சண்டைச் சச்சரவு இன்றி ஆட நினைப்பார்கள். ஃபீல்டிங்கில் எப்போதும் பொறுப்பாக இருப்பார்கள். அதனாலேயே ஒவ்வொரு முறையும் ஐசிசி போட்டிகளில் அவர்கள் தோற்று வந்து நிற்கும் போது பரிதாபமாக இருக்கும். பிளாக்கேப்ஸுக்கு இன்னும் கொஞ்சம் நல்லது நடக்கலாம்.
பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் மிகவும் சோம்பலாக விளையாடினார்கள். வில்லியம்சன் பந்துகளை வீணடித்து நீண்ட நேரம் ஆடியது மற்ற பேட்டர்களையும் பாதித்தது. இப்படியா அரையிறுதியில் ஆடுவது? உலகக் கோப்பையை வெல்வது அவ்வளவு எளிதில்லையே. இத்தனை வருடங்களில் இந்தியாவே மூன்று உலகக் கோப்பைகளைத்தான் தட்டியிருக்கிறது. நியூசிலாந்தை விடவும் அதிகத் திறமைசாலிகளைக் கொண்ட தென்னாப்பிரிக்கா இன்னும் ஒரு உலகக் கோப்பையையும் வெல்ல முடியாமல் தவிக்கிறது. 90களில் கிரிக்கெட் ஜாம்பவான்களைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்த மற்றொரு சிறிய நாடான இலங்கையைப் போல நியூசிலாந்தும் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செய்யும் ஒரு காலம் வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.