செய்திகள்

7-வது முறையாக மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணி!

இலங்கையை எளிதாக வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய அணி. 

DIN


மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் இலங்கையை எளிதாக வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய அணி. 

2022 மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவும் இலங்கையும் மோதின. தொடர்ச்சியாக 7-வது முறையாக ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடியது இந்திய அணி. கடந்த 14 வருடங்களில் ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றில் இலங்கை அணி விளையாடியது இதுவே முதல்முறை.

சில்ஹெட்டில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில் மாற்றம் எதுவுமில்லை. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவுக்குப் பதிலாக பேட்டர் தயாளன் ஹேமலதா இந்திய அணியில் இடம்பெற்றார். 

3-வது ஓவரில் இலங்கை அணி கேப்டன் சமரி அத்தபத்து 6 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தன. ரேணுகா சிங் வீசிய 4-வது ஓவரில் ஹர்ஷிதா, அனுஷ்கா, ஹாசினி என 3 பந்துகளில் 3 விக்கெட்டுகள் இந்தியாவுக்குக் கிடைத்தன. அனுஷ்கா ரன் அவுட் ஆனார். இதன்பிறகு கவிஷாவை போல்ட் செய்தார் ரேணுகா. முதல் 5 விக்கெட்டுகளில் ரேணுகாவுக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன. இதனால் பவர்பிளேவின் முடிவில் 6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துத் தடுமாறியது இலங்கை அணி.

இதன்பிறகும் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தன. 10 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இலங்கை அணி. 16-வது ஓவரின் முடிவில் 43 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது. கடைசி விக்கெட்டுக்கு 22 ரன்கள் கிடைத்தன. இலங்கை பேட்டர்களால் ஒட்டுமொத்தமாக 5 பவுண்டரிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளும் ராஜேஸ்வரி, ஸ்னேக் ராணா தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்திய மகளிர் அணி பெரிய சிரமம் இல்லாமல் 8.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. தொடக்க வீராங்கனை மந்தனா 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 7-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT