செய்திகள்

கர்டிஸ் கேம்பரின் மறக்க முடியாத அதிரடி ஆட்டம்: ஸ்காட்லாந்தை வீழ்த்திய அயர்லாந்து!

DIN

டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் கர்டிஸ் கேம்பர் அதிரடியால் ஸ்காட்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து.

61-4 என்கிற நிலையை 180-4 ஆக மாற்றி சாதித்துள்ளார்கள் அயர்லாந்து பேட்டர்களான கர்டிஸ் கேம்பர் மற்றும் ஜார்ஜ் டாக்ரெல். 

ஹோபர்டில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. 

டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தோற்கடித்த ஸ்காட்லாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்திலும் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றுவிட்டால் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகிவிடும் என்கிற நிலை இருந்தது. முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகத் தோற்ற அயர்லாந்து, இந்த ஆட்டத்தில் வெல்லவேண்டிய நெருக்கடியில் இருந்தது. உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் இதுவரை விளையாடிய ஆறு ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த நான்கு அணிகள் வெற்றி பெற்றதால் ஸ்காட்லாந்தின் வெற்றியே அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.  

ஸ்காட்லாந்து தொடக்க வீரர் மைக்கேல் ஜோன்ஸ் சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்து தனது அணி பெரிய ஸ்கோரைக் குவிக்க முக்கியக் காரணமாக அமைந்தார். கேப்டன் ரிச்சி பெரிங்டன் 37 ரன்கள் எடுத்தார். ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

கடினமாக இலக்கை விரட்ட ஆரம்பத்தில் மிகவும் தடுமாறியது அயர்லாந்து அணி. முதல் 4 விக்கெட்டுகளை 9.3 ஓவர்களில் 61 ரன்களுக்கு இழந்தது. இதன்பிறகு தான் வானவேடிக்கை காண்பித்தார்கள் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கர்டிஸ் கேம்பரும் ஜார்ஜ் டாக்ரெலும். 

கடைசி 10 ஓவர்களில் அயர்லாந்தின் வெற்றிக்கு 112 ரன்கள் தேவைப்பட்டன. ஏற்கெனவே 4 பேட்டர்கள் ஆட்டமிழந்த நிலையில் நம்பிக்கையுடன் இலக்கை எதிர்கொண்டார்கள் கேம்பரும் ஜார்ஜ் டாக்ரெலும். 11-வது ஓவருக்குப் பிறகு ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தது 11 ரன்களை எடுத்தார்கள். நிறைய பவுண்டரிகள் அடித்ததுடன் நிறைய ரன்களையும் ஓடியும் எடுத்தார்கள். இந்தத் துடிதுடிப்பான ஆட்டத்தின் முன்பு கவிழ்ந்து போனது ஸ்காட்லாந்து அணி.

19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து அட்டகாசமான வெற்றியை அடைந்தது அயர்லாந்து. 5-வது விக்கெட்டுக்கு 9.3 ஓவர்களில் 119 ரன்கள் சேர்த்தார்கள் கேம்பரும் ஜார்ஜ் டாக்ரெலும். டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து அதிகமாக விரட்டிய ரன்கள் இதுவே. கர்டிஸ் கேம்பர் 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 72 ரன்களும் டாக்ரெல் 27 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் எடுத்து சாதித்தார்கள். 

இன்றைய மற்றொரு ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தினால் வெள்ளியன்று நடைபெறும் குரூப் பி பிரிவில் இரு நாக் அவுட் ஆட்டங்கள் நடைபெறும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா

ஊரக பகுதிகளில் மூன்று நாட்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

SCROLL FOR NEXT