செய்திகள்

மின்னல் வேக கோலும் ஐரோப்பிய அணிக்கு எதிரான முதல் வெற்றியும்: 6-ம் நாள் புள்ளிவிவரங்கள்

DIN

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் 6-ம் நாளன்று நடைபெற்ற ஆட்டங்களில் ஈரான், செனகல் ஆகிய இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இரு ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.

ஈரான், வேல்ஸை 2-0 என வென்றது. செனகல் 3-1 என கத்தாரை வீழ்த்தி அந்த அணியைப் போட்டியிலிருந்து வெளியேற்றியது. நெதர்லாந்து - ஈகுவடார் அணிகளின் ஆட்டம் 1-1 எனவும் இங்கிலாந்து - அமெரிக்க அணிகளின் ஆட்டம் 0-0 எனவும் டிரா ஆகின. 

* போட்டியை நடத்தும் நாடு என்பதால் உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்ற முதல் நாடு - கத்தார். இதனால் தகுதிச்சுற்று ஆட்டங்களில் அந்த அணி விளையாடவில்லை. ஃபிஃபா தரவரிசையில் கடந்த வருடம் தான் முதல்முறையாக 48-வது இடத்தைப் பிடித்தது. முதல்முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய கத்தார் அணி முதல் அணியாக இந்த உலகக் கோப்பையில் இரு தோல்விகளால் வெளியேறியுள்ளது. 2022 உலகக் கோப்பையில் குரூப் ஆட்டங்களில் இரு தோல்விகளைக் கண்ட முதல் நாடும் கத்தார் தான். மேலும் உலகக் கோப்பையை நடத்திய நாடுகளில் முதல் சுற்றிலேயே வெளியேறிய 2-வது நாடு, கத்தார். 2010-ல் தென்னாப்பிரிக்கா இதேபோல அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது. 

* உலகக் கோப்பையில் கோலடித்த 75-வது நாடு - கத்தார்.

* அமெரிக்கா விளையாடிய இரு ஆட்டங்களிலும் ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளது. கடந்த 14 மாதங்களில் அமெரிக்காவுக்கு வெளியே அந்த அணி ஓர் ஆட்டத்திலும் வெல்லவில்லை. 

* இந்த உலகக் கோப்பையில் ஆட்டம் தொடங்கிய வேகத்தில் கோலடித்த வீரர் - நெதர்லாந்தின் கோடி கேக்போ. ஈகுவடாருக்கு எதிராக 6-வது நிமிடத்திலேயே கோலடித்து அசத்தினார்.

* ஈரான், வேல்ஸை 2-0 என வென்றது. ஈரான் அணி இதுவரை விளையாடிய 10 உலகக் கோப்பைப் போட்டிகளில் முதல்முறையாக ஐரோப்பிய நாட்டுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. மேலும் முதல்முறையாக ஐரோப்பிய நாட்டை கோலடிக்க விடாமல் செய்துள்ளது. 
 
* இந்த உலகக் கோப்பையில் முதல்முறையாக பெனால்டி பகுதிக்கு வெளியே இருந்து ஒரு கோல் அடிக்கப்பட்டுள்ளது. அடித்தவர் ஈரானின் ரூஸ்பே செஸ்மி.

* இந்த உலகக் கோப்பையில் 5 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்றுள்ளன. கேமரூன், கானா, செனகல், துனிசியா, மொராக்கோ. 2022 உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பெற்ற ஆப்பிரிக்க நாடு - செனகல். கத்தாருக்கு எதிராக 3 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. 

* ஈகுவடார் அணி 4-வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது. 2002, 2006, 2014, 2022. கடந்த உலகக் கோப்பையில் அடித்த 3 கோல்கள், இந்த வருடம் இதுவரை அடித்த 3 கோல்கள் என ஈகுவடார் அணி உலகக் கோப்பையில் கடைசியாக அடித்த 6 கோல்களுக்கும் சொந்தக்காரர், இன்னர் வலென்சியா. இதுபோல தனது அணிக்காக உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 6 கோல்களை அடித்த 4-வது வீரர். உலகக் கோப்பையில் ஈகுவடார் இதுவரை அடித்த 13 கோல்களில் வலென்சியா 6 கோல்களை அடித்துள்ளார். நம் ஊருக்கு கோலி எப்படியோ அப்படி ஈகுவடாருக்கு இன்னர் வலென்சியா போல.

* கடந்த வியாழனுடன் அனைத்து அணிகளும் தங்களுடைய முதல் ஆட்டத்தை விளையாடி முடித்தன. அப்போதுவரை ஓர் அணியும் ரெட் கார்ட் வாங்கவில்லை. 1986-க்குப் பிறகு இப்போதுதான் இதுபோல நடந்துள்ளது. ஆனால் அடுத்த நாளே ரெட் கார்ட் வழங்கப்பட்டுவிட்டது! ஈரான் வீரருடன் பெனால்டி பகுதிக்கு வெளியே வந்து மோதிய வேல்ஸ் கோல்கீப்பர் வேய்ன் ஹென்னஸிக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். உலகக் கோப்பைப் போட்டிகளில் ரெட் கார்ட் வாங்கிய 3-வது கோல்கீப்பர் அவர். 

* தனது 35-வது உலகக் கோப்பை ஆட்டத்தை விளையாடிய அமெரிக்கா முதல்முறையாக 0-0 என டிரா செய்துள்ளது. 1950க்குப் பிறகு உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிராக எந்த ஐரோப்பிய அணி விளையாடினாலும் ஒரு கோலாவது அடித்துவிடும். 1950-ல் இங்கிலாந்தை 1-0 என வென்றது. அதற்குப் பிறகு இப்போதுதான் ஐரோப்பிய நாடு ஒன்றை கோலடிக்க விடாமல் அமெரிக்கா தடுத்துள்ளது. 

* உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடிய 3 ஆட்டங்களிலும் இங்கிலாந்தால் வெல்ல முடியவில்லை. 1950-ல் 0-1 என அமெரிக்காவிடம் தோற்ற இங்கிலாந்து அடுத்ததாக 2010-ல் 1-1 எனவும் தற்போது 0-0 எனவும் டிரா செய்துள்ளது. 

* உலகக் கோப்பையில் 0-0 டிராக்களை அதிகமுறை விளையாடிய அணி இங்கிலாந்து. 0-0 டிராக்களை 12 முறை விளையாடியுள்ளது. இதுபோல 0-0 டிராக்களை பிரேசில் 9 முறை விளையாடியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே மாதத்தில் 2 லட்சம் இந்தியர்களின் கணக்கை நீக்கிய எக்ஸ்!

சித்திரைத் திருவிழா: தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

கச்சத்தீவு பிரச்னையில் மீனவர்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைப்பு: ஜி.கே. வாசன்

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்!

கேஜரிவாலை பயங்கரவாதியை போல் நடத்துகிறார்கள்: பகவந்த் மான்

SCROLL FOR NEXT