செய்திகள்

நாட்டுக்குப் பதிலாக கிளப் அணிகளுக்கு முன்னுரிமை தரும் கிரிக்கெட் வீரர்கள்: அதிர்ச்சித் தகவல்கள்!

DIN

முன்னணி கிரிக்கெட் வீரர்கள் நாட்டுக்குப் பதிலாக கிளப் அணிகளுக்கு முன்னுரிமை தருவதாக சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சங்க சம்மேளனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

டி20 லீக் போட்டிகளின் வளர்ச்சி காரணமாக கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவத்தும் அளிப்பது குறைந்து வருகிறது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் பிரபல வீரர்களான டிரெண்ட் போல்ட், கிராண்ட்ஹோம், ஜிம்மி நீஷம், மார்டின் கப்தில் ஆகிய நால்வரும் ஒப்பந்தத்தில் இருந்து விலகி டி20 லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முன்வந்துள்ளார்கள். கிராண்ட்ஹோம் இதற்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 29 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து டி காக் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சங்க சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களைத் தருகிறது. 

முன்னணியில் உள்ள 20 டி20 வீரர்களில் 40% பேர் தங்கள் நாட்டுக்கு விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் விலகி டி20 லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அறிக்கை கூறுகிறது. 42% வீரர்கள் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தம், லீக் ஒப்பந்தம் என இரண்டுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து முன்னணி டி20 கிரிக்கெட் வீரர்களில் 82% பேர் தேசிய ஒப்பந்தத்துக்குப் பிரத்யேகமாக முன்னுரிமை அளிக்கவில்லை எனத் தெரிய வருகிறது. 2022-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் வீரர்களின் உலகளாவிய கிரிக்கெட் வாய்ப்புகள் குறித்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சங்க சம்மேளனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்கவில்லை. இரு நாட்டு வீரர்களும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சங்கத்தில் இன்னும் இணையவில்லை. 

டிம் டேவிட்

இந்த ஆய்வில் 11 நாடுகளைச் சேர்ந்த 400 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். தற்போதைய நிலைமையில் திறமையான கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் டி20 லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் திறமைகள் வீணாவதாக அறிக்கை எச்சரித்துள்ளது. 2023-ம் வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐஎல்டி20 என்கிற போட்டியும் தென்னாப்பிரிக்காவில் எஸ்ஏ20 என்கிற போட்டியும் புதிதாகத் தொடங்கப்படவுள்ளன. 

மிகச்சிறந்த 100 கிரிக்கெட் வீரர்களில் 82 பேர் லீக் போட்டிகள் மற்றும் சர்வதேசப் போட்டிகள் என இரண்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாகச் செயல்படுவதாக அறிக்கை கூறியுள்ளது. இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையெனும்போது நியூசிலாந்து வீரர்கள் போல சர்வதேச கிரிக்கெட்டுக்கான ஒப்பந்தத்தில் இருந்து அவர்கள் விலகிவிடுகிறார்கள். சிறிய கிரிக்கெட் நாடுகளில் லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வீரர்கள் அதிகமாக உள்ளார்கள் என்றும் அறிக்கை கூறியுள்ளது. சில வீரர்கள் 3 அணிகளில் இடம்பெறுகிறார்கள். இதனால் குறைந்த அளவிலான சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்கிறார்கள், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் அளிக்கும் முக்கியத்துவமும் மிகவும் குறைந்துவிடுகிறது என அறிக்கையில் பல உண்மை விவரங்கள் தெரிய வருகின்றன. 

2021-ம் ஆண்டு பிரபல வீரர்களான டிம் டேவிட், ரஷித் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் குறைந்தது ஆறு டி20 லீக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்கள். ஆய்வில் பங்கேற்ற வீரர்களில் 18% பேர் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பவர்களாக உள்ளார்கள். 9 முக்கிய நாடுகளைக் கொண்ட முன்னணி டி20 வீரர்களில் 40% பேர் தங்கள் நாட்டின் ஒப்பந்தம் இல்லாமல் சுதந்திரமாக, சுயமாக முடிவெடுக்கும் நிலையில் உள்ளதாக அறிக்கை கூறியுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டிலும் டி20 கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 2003-ல் ஒரு டி20 சர்வதேச ஆட்டமும் நடைபெறவில்லை. ஆனால் 2021-ல் விளையாடப்பட்ட 485 சர்வதேச ஆட்டங்களில் டி20 கிரிக்கெட்டுக்கு 71% முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 346 ஆட்டங்கள். மேலும் 46 டெஸ்டுகளும் 93 ஒருநாள் ஆட்டங்களும் கடந்த வருடம் நடைபெற்றன (கடந்த வருடம் டி20 உலகக் கோப்பையும் நடைபெற்றது).

இந்த அறிக்கையில் ஆறுதல் அளிக்கும் ஒரே செய்தி - 74% வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறியுள்ளார்கள். அதுவும் கூட 2018 அறிக்கையில் 82% ஆக இருந்தது தற்போது சற்று குறைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேளூரில் பாதுகாப்பான தாய்மை தினம்

பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டு பயிற்சி

சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரி சங்ககிரியில் ஊா்வலம்

SCROLL FOR NEXT