ஸ்மித் டக் அவுட்: ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை எடுத்த அஸ்வின்!
ஆஸ்திரேலிய அணி மதிய உணவு இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி மதிய உணவு இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், தில்லியில் இன்று தொடங்கியுள்ளது. 2017-க்குப் பிறகு தில்லியில் டெஸ்ட் ஆட்டம் நடைபெறுகிறது. தில்லியில் தனது 100-வது டெஸ்டை விளையாடுகிறார் புஜாரா.
டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணி ஒரு வேகப்பந்து வீச்சாளர், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடமில்லை.
50 ரன்கள் வரை வந்தபிறகு ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. 15 ரன்களில் ஷமி பந்துவீச்சில் வார்னர் ஆட்டமிழந்தார். வந்தவேகத்தில் நான்கு பவுண்டரிகள் அடித்த லபுஷேன், 18 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதே ஓவரில், புதிதாகக் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், ரன் எதுவும் எடுக்காமல் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஒரே ஓவரில் இரு முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் அஸ்வின்.
முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. 74 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்கள் எடுத்த கவாஜாவும் 1 ரன்னுடன் டிராவிஸ் ஹெட்டும் களத்தில் உள்ளார்கள்.