ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் செளராஷ்டிரம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்காலை ஞாயிற்றுக்கிழமை வென்று, 2-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இதற்கு முன் 2019-20 சீசனில் அந்த அணி முதல் முறையாக சாம்பியனாகியிருந்தது. கடந்த 10 சீசன்களில் 5 முறை செளராஷ்டிரம் இறுதி ஆட்டம் வரை வந்தது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், 1938-39 காலகட்டத்தில் முதல் ரஞ்சி கோப்பை வென்ற பெங்காலுக்கு, 2-ஆவது கோப்பை வாய்ப்பு தற்போதும் தள்ளிப்போனது.
கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற செüராஷ்டிரம் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதல் இன்னிங்ஸை ஆடிய பெங்கால் 54.1 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷாபாஸ் அகமது 11 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் சேர்க்க, செளராஷ்டிர பெளலர்களில் ஜெயதேவ் உனத்கட், சேத்தன் சகாரியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
பின்னர் தனது இன்னிங்ஸை ஆடிய செளராஷ்டிரம், 110 ஓவர்களில் 404 ரன்கள் சேர்த்து 10 விக்கெட்டுகளை இழந்தது. அர்பித் வசவடா 11 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் சேர்க்க, பெங்கால் பெüலிங்கில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய பெங்கால், சனிக்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களை எட்டியிருந்தது. 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் மனோஜ் திவாரி 10 பவுண்டரிகளுடன் 68, ஷாபாஸ் அகமது 27, அபிஷேக் பொரேல் 3, ஆகாஷ் கடக் 4, ஆகாஷ் தீப் 1, இஷான் பொரேல் 22 ரன்களுக்கு வெளியேற, 70.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு பெங்கால் இன்னிங்ஸ் முடிந்தது. செüராஷ்டிர தரப்பில் ஜெயதேவ் உனத்கட் 6, சேத்தன் சகாரியா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தனர்.
இறுதியில், 12 ரன் என்ற எளிதான இலக்கை நோக்கி ஆடிய செüராஷ்டிரம், 2.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்து வென்றது. ஹர்விக் தேசாய் 4, விஷ்வராஜ் ஜடேஜா 10 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்த, ஜே கோஹில் டக் அவுட்டாகியிருந்தார். பெங்காலின் ஆகாஷ் தீப் அவரது விக்கெட்டை கைப்பற்றினார்.
9 விக்கெட்டுகள் சாய்த்த ஜெயதேவ் உனத்கட் ஆட்டநாயகன் விருதையும், போட்டி முழுவதுமாக 907 ரன்கள் விளாசிய அர்பித் வசவடா தொடர்நாயகன் விருதையும் வென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.