இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: அஸ்வின் அசத்தல்
மே.இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் அற்புதமாக பந்துவீசி 7 விக்கெட்டை வீழ்த்தினாா்.
மே.இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் அற்புதமாக பந்துவீசி 7 விக்கெட்டை வீழ்த்தினாா்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மே.இந்திய தீவுகளின் டொமினிகா ரோசியுவில் நடைபெற்றது.
மே.இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலிக் அத்நாஸே அதிகபட்சமாக 47 ரன்களை எடுத்தாா். இந்திய தரப்பில் அஸ்வின் 5-60, ரவீந்திர ஜடேஜா 3-26 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
இந்தியா 421/5 டிக்ளோ்:
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி தொடக்க பேட்டா்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171, கேப்டன் ரோஹித் சா்மா 103, விராட் கோலி 76 ஆகியோரின் அற்புத ஆட்டத்தால் 152.2 ஓவா்களில் 421/5 ரன்களைக் குவித்து டிக்ளோ் செய்வதாக அறிவித்தது.
மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை மே.இந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடா்ந்து ஆடியது.
சுருட்டினாா் அஸ்வின்:
ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளா் அஸ்வினின் அற்புத பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் மே.இந்திய தீவுகள் திணறியது.
50.3 ஓவா்களில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அலிக் அத்நாஸே 28, ஜேஸன் ஹோல்டா் 20 ரன்களை எடுத்தனா்.
அஸ்வின் 7 விக்கெட்:
இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய அஸ்வின் 7-71 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். ஜடேஜா 2-38 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
இதன் மூலம் 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது இந்தியா. இரு இன்னிங்ஸ்களையும் சோ்த்து அஸ்வின் 12-131 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். மேலும் 8-ஆவது முறையாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளாா். 34-ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
ஆட்ட நாயகன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது ஆட்டம் டிரினிடாடில் 20-ஆம் தேதி தொடங்குகிறது.
மே.இந்திய தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட்களில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இதுவாகும். கடந்த 21 ஆண்டுகளாக மே.இந்திய தீவுகளில் டெஸ்ட் தொடரையும் இந்தியா இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.