மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அபார பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்திய மதீஷா பதிரானாவை சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக, இலங்கையைச் சேர்ந்த இளம் வீரரான மதீஷா பதிரானா தனது அபாரமான பந்துவீச்சுத் திறமையை வெளிப்படுத்தினார். 4 ஓவர்களை வீசிய அவர் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
மும்பை அணியின் வெற்றிக்குப் பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பதிரானாவை வெகுவாகப் பாராட்டினார்.
மும்பை அணியுடனான வெற்றிக்குப் பிறகு அவர் பேசியதாவது: இந்த வெற்றிக்கு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. கடந்த போட்டி மழையினால் முடிவினை எட்டவில்லை. அதனால், இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. புள்ளிப்பட்டியலில் 4-5 அணிகள் ஒரே புள்ளிகளைப் பெற்றுள்ளன. ஒரே புள்ளிகளில் உள்ள அணிகளுக்கு இடையேயும் போட்டிகள் உள்ளன. ஒவ்வொரு வெற்றியும் முக்கியமானது. முதலில் நான் பேட் செய்யவேண்டுமென்று நினைத்தேன். ஆனால், எங்களது ஆலோசனையில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய ஆதரவு தெரிவித்ததால் பந்துவீச்சை தேர்வு செய்தேன். மதீஷா பதிரானா சிறப்பாக பந்துவீசினார். . அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதைக் காட்டிலும் ஐசிசி நடத்தும் தொடர்களில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன். ஒரு நாள் போட்டிகளிலும் அவர் குறைவாக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். அவர் அனைத்து நேரங்களிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர் அல்ல. முக்கியமான தருணங்களில் அவரை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். அவர் ஐசிசி நடத்தும் அனைத்து முக்கியப் போட்டிகளிலும் விளையாட வேண்டும். அவர் மிகவும் இளம் வீரர். இலங்கை அணிக்கு அவர் மிகப் பெரிய சொத்து. அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.