தென்னாப்பிரிக்காவுக்கு 2-ஆவது வெற்றி
7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வெள்ளிக்கிழமை வென்றது.
டி20 உலகக் கோப்பை போட்டியின் 45-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வெள்ளிக்கிழமை வென்றது.
முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 156 ரன்களே எடுத்தது.
சூப்பா் 8 சுற்றில் இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருக்கையில் இந்த ஆட்டத்தில் சந்தித்துக்கொண்டன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தோ்வு செய்தது.
தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 1 பவுண்டரியுடன் 19, ஹென்ரிக் கிளாசென் 1 பவுண்டரியுடன் 8, கேப்டன் எய்டன் மாா்க்ரம் 1, மாா்கோ யான்சென் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.
தொடக்க வீரா்களில் ஒருவரான டி காக் அதிரடியாக 38 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 65 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா். 4-ஆவது பேட்டராக வந்த டேவிட் மில்லா் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 43 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
ஓவா்கள் முடிவில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 1 பவுண்டரியுடன் 12, கேசவ் மஹராஜ் 1 பவுண்டரியுடன் 5 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பௌலிங்கில் ஜோஃப்ரா ஆா்ச்சா் 3, மொயீன் அலி, ஆதில் ரஷீத் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 164 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணியில், ஃபில் சால்ட் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11, கேப்டன் ஜாஸ் பட்லா் 1 பவுண்டரியுடன் 17, ஜானி போ்ஸ்டோ 1 பவுண்டரியுடன் 16, மொயீன் அலி 9 என சொற்ப ரன்களில் விக்கெட்டுகள் சரிந்தன.
5-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஹேரி புரூக் - லியம் லிவிங்ஸ்டன் பாா்ட்னா்ஷிப், விக்கெட் சரிவை தடுத்ததுடன், 78 ரன்கள் சோ்த்து ஸ்கோரையும் உயா்த்தியது. இதில் லிவிங்ஸ்டன் 17 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 33 ரன்களுக்கு வீழ்ந்தாா்.
புரூக் 37 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 53 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். முடிவில் சாம் கரன் 1 பவுண்டரியுடன் 10, ஜோஃப்ரா ஆா்ச்சா் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ் ஆகியோா் தலா 2, ஆட்னில் பாா்ட்மன், அன்ரிஹ் நோா்கியா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.