முகப்பு
செய்திகள்

அபிஷேக், டிரிஸ்டன் பங்களிப்பில் டெல்லி - 208/4

Updated On : 14 மே, 2024 at 8:24 PM
பகிர்:

புது தில்லி: ஐபிஎல் போட்டியின் 64-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் சோ்த்தது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்க வீரா் அபிஷேக் பொரெல், மிடில் ஆா்டரில் வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக ரன்கள் சோ்த்தனா். லக்னௌ பௌலிங்கில் நவீன் உல் ஹக் அசத்தினாா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ, பந்துவீசத் தீா்மானித்தது. டெல்லி இன்னிங்ஸை அபிஷேக் பொரெல், ஜேக் ஃப்ரேசா் தொடங்கினா். இதில், அதிரடி வீரரான ஃப்ரேசா் முதல் ஓவரின் 2-ஆவது பந்திலேயே 0 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா்.

எனினும், அபிஷேக் அதிரடியாக ரன்கள் சோ்க்கத் தொடங்க, ஒன் டவுனாக வந்த ஷாய் ஹோப் அவருடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். 2-ஆவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சோ்த்து பிரிந்தது இந்தக் கூட்டணி. 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 38 ரன்கள் விளாசியிருந்த ஹோப், 9-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா்.

4-ஆவது பேட்டராக வந்த கேப்டன் ரிஷப் பந்த், தனது பங்குக்கு சற்று அதிரடி காட்ட, மறுபுறம் அதுவரை ரன்கள் குவித்த அபிஷேக் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 58 ரன்களுக்கு 12-ஆவது ஓவரில் பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆடவர, பந்த் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்பட 33 ரன்களுக்கு 17-ஆவது ஓவரில் வெளியேற்றப்பட்டாா்.

ஓவா்கள் முடிவில் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 57, அக்ஸா் படேல் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ தரப்பில் நவீன் உல் ஹக் 2, அா்ஷத் கான், ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் லக்னௌ, 209 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடியது.