சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் அதிரடி; நியூசி.க்கு இமாலய இலக்கு!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 255 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 255 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாதில் இன்று (மார்ச் 8) நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
Advertisement
Advertisement
சஞ்சு சாம்சன் அதிரடி; நியூசிலாந்துக்கு இமாலய இலக்கு!
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இந்த இணை இந்தியாவுக்கு மிகவும் அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. இவர்களது அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்தது.
அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 18 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்கள் பறந்தன. ரச்சின் ரவீந்திரா வீசிய 14-வது ஓவரில் சஞ்சு சாம்சன் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர்.
அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஜேம்ஸ் நீஷம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். சாம்சனைத் தொடர்ந்து, 24 பந்துகளில் அதிரடியாக விளையாடி 54 ரன்கள் (4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள்) எடுத்திருந்த இஷான் கிஷன் விக்கெட்டினையும் நீஷம் கைப்பற்றி அசத்தினார்.
அடுத்த பந்திலேயே கேப்டன் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டினை வீழ்த்தி வந்த வேகத்திலேயே அவரை பெவிலியனுக்கு அனுப்பினார் நீஷம். சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஜேம்ஸ் நீஷம். இதனையடுத்து, ஹார்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர்.
ஜேம்ஸ் நீஷம் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தியது. ஹார்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா இருவரும் பவுண்டரிகள் எடுக்கத் தடுமாறினர். ஹார்திக் பாண்டியா 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 8 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
நியூசிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளையும், ரச்சின் ரவீந்திரா மற்றும் மாட் ஹென்றி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.
Batting first, the Indian team scored 255 runs in the final match against New Zealand in the T20 World Cup.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.