காமன்வெல்த் போட்டியில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.
12 ஆண்டுகளுக்குப் பின்னர் 23-வது காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டனில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 2026 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன. கடைசியாக கிளாஸ்கோவில் கடந்த 2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன.
இந்தத் தொடரில் இந்திய அதிகளவில் பதக்கங்களை வெல்லும் ஹாக்கி, பேட்மிண்டன், மல்யுத்தம், கிரிக்கெட் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகள் நீக்கப்பட்டது விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தத் தொடரை குறைந்த பொருள் செலவில் முடிப்பதற்கான 10 போட்டிகள் கொண்ட பட்டியலையும் காமன்வெல்த் சம்மேளனம் அறிவித்துள்ளது.
டேபிள் டென்னிஸ், ஸ்குவாஸ், டிரயத்லான், ரக்பி ஆகிய போட்டிகளும் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும், போட்டிகளுக்கான செலவைக் குறைக்கும் நோக்கில் 4 மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அறிக்கப்பட்டுள்ள காமன்வெல்த் போட்டிகள்
தடகளம் மற்றும் பாரா தடகளம்
நீச்சல் மற்றும் பாரா நீச்சல்
ஜிம்னாஸ்டிக்ஸ்
சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பாரா சைக்கிள் ஓட்டுதல்
வலைப்பந்து
பளு தூக்குதல் மற்றும் பாரா பளு தூக்குதல்
குத்துச்சண்டை
ஜூடோ
பௌல்ஸ் மற்றும் பாரா பௌல்ஸ்
3x3 கூடைப்பந்து மற்றும் 3x3 சக்கர நாற்காலி கூடைப்பந்து
ஸ்காட்ஸ்டோர்ன் மைதானம், டோல்கிராஸ் சர்வதேச நீச்சல் குளம், எமிரேட்ஸ் அரீனா, ஸ்காட்டிஸ் நிகழ்வு அரங்கு உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடக்க இருக்கின்றன.
இந்தத் தொடரில் இருந்து ஹாக்கி நீக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். 2002 ஆம் ஆண்டு நடந்த ஹாக்கி போட்டியில் இந்திய அணியினர் 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலமும் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் தங்கம் உள்பட மூன்று பதக்கங்கள் வென்றிருந்தனர். மேலும்ம் பாரீஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணியினர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தனர்.
இதுவரை பேட்மிண்டனில் 10 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 31 பதக்கம் வென்றிருள்ளனர். துப்பாக்கி சுடுதலில் இந்தியர்கள் 135 பதக்கங்கள் வென்றுள்ளனர். அதில் 63 தங்கம், 44 வெள்ளி, 28 வெண்கலப் பதக்கங்களும் அடங்கும். மல்யுத்தப் போட்டியில் 49 தங்கம், 39 வெள்ளி, 26 வெண்கலம் என 114 பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீரர்கள் அதிகளவில் பதக்கம் வெல்லும் அனைத்து போட்டிகளும் காமன்வெல்த் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.