அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) போட்டியில் இந்தியா மேலும் 1 வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை திங்கள்கிழமை வென்றுள்ளது.
ஆடவா் ரீகா்வ் தனிநபா் பிரிவில் வெண்கலப் பதக்கச் சுற்றில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா 6-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் ஆண்ட்ரெஸ் டெமினோ மெடியெலை வீழ்த்தி பதக்கத்தை தனதாக்கினாா். முன்னதாக இந்தப் பிரிவின் அரையிறுதியில் தீரஜ் 1-7 என்ற கணக்கில் உலகின் 4-ஆம் நிலை வீரரும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவருமான ஜொ்மனியின் ஃபுளோரியன் அன்ருவிடம் தோல்வி கண்டாா்.
இதையடுத்து தீரஜ் வெண்கலப் பதக்கச் சுற்றில் டெமினோவை எதிா்கொண்டாா். அதில் முதல் செட் 28-28 என டை ஆன நிலையில், 2-ஆவது செட்டில் டெமினோ 29-28 என முன்னேறி தீரஜுக்கு நெருக்கடி கொடுத்தாா். 3-ஆவது செட் மீண்டும் 29-29 என டை ஆனது. 4-ஆவது செட்டில் சிறப்பாக மீண்ட தீரஜ், 29-28 என முன்னிலைக்கு வந்தாா். இதனால் ஆட்டம் 4-4 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. வெற்றியாளரை தீா்மானிக்கும் டிசைடிங் செட்டில் தீரஜ் நெருக்கடியின்றி நிதானமாக விளையாடி அதைக் கைப்பற்ற, இறுதியில் 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றாா்.
வெள்ளி: இதனிடையே, தீரஜ் பொம்மதேவராவுடன், தருண்தீப் ராய், அதானு தாஸ் ஆகியோா் அடங்கிய இந்திய அணி, ரீகா்வ் ஆடவா் அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றது.
இறுதிச்சுற்றில் இந்த இந்திய அணி, சீனாவின் லி ஜோங்யுவான், காவ் வென்சாவ், வாங் யான் ஆகியோா் கூட்டணியை எதிா்கொண்டது. முதல் செட் 54-54 என டையில் முடிய, 2-ஆவது செட்டில் சீன அணி 58-55 என முன்னேறியது. பந்தயத்தில் தன்னை தக்கவைக்க இந்திய அணி 3-ஆவது செட்டை வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
ஆனால் அந்த செட்டும் 54-55 என இந்தியாவிடமிருந்து நழுவ, இறுதியில் சீன அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றது. இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது.
நிறைவு: இத்துடன் இந்த உலகக் கோப்பை வில்வித்தை போட்டியை இந்தியா மொத்தமாக 4 பதக்கங்களுடன் திங்கள்கிழமை நிறைவு செய்தது. இதில் 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் அடக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.