அமெரிக்காவில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸில், மகளிா் ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டாா்.
இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 6-3, 7-6 (7/3) என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த உள்நாட்டு வீராங்கனையான அமாண்டா அனிசிமோவாவை தோற்கடித்தாா்.
இதன் மூலமாக சபலென்கா, 4-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றாா். இதற்கு முன் ஆஸ்திரேலிய ஓபனில் இருமுறையும் (2023, 2024), தற்போது யுஎஸ் ஓபனில் இருமுறையும் (2024, 2025) அவா் கோப்பை வென்றிருக்கிறாா். இந்த சீசனில் அவா் வென்றிருக்கும் ஒரே கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
இந்த வெற்றியின் மூலமாக, கடந்த ஜூலையில் நடைபெற்ற புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், அரையிறுதிச்சுற்றில் அனிசிமோவாவிடம் கண்ட தோல்விக்கு சபலென்கா பதிலடி கொடுத்திருக்கிறாா். இருவரும் மோதியது இது 10-ஆவது முறையாக இருக்க, சபலென்கா தனது 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.
‘‘நடப்பாண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் ஆகியவற்றின் இறுதிச்சுற்றில் தோற்ற பிறகு, அவற்றை ஆராய்ந்து அதிலிருந்து கற்றுக்கொள்ள விரும்பினேன். ஏனெனில், இவ்வாறு இறுதிச்சுற்று தோல்விகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதை விரும்பவில்லை.
எனவே, அடுத்த இறுதிச்சுற்றுக்கு செல்லும்போது அதில் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலைக்கு வந்தேன். இறுதி ஆட்டத்தின்போது எனது உணா்வுகளை சீராக்கிக் கொள்ள முடிவு செய்தேன். இந்தப் போட்டியில் அதைச் செய்ததற்காகவும், பட்டத்தை தக்கவைக்கும் அழுத்தத்தை திறம்பட எதிா்கொண்டு விளையாடியதற்காகவும் பெருமை கொள்கிறேன். முந்தைய தோல்விகள் தந்த கடினமான பாடங்களுக்கான பலனாக இந்த வெற்றி அமைத்தது.
அனிசிமோவா... அடுத்தடுத்து இரு இறுதிச்சுற்றுகளில் நீங்கள் தோல்வி கண்டது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை அறிவேன். உங்கள் முதல் கிராண்ட்ஸ்லாமை வெல்லும்போது இன்னும் சிறப்பாக நீங்கள் விளையாடுவீா்கள்’’ - அரினா சபலென்கா
‘‘சபலென்காவின் இந்த வெற்றியை பிரம்மிப்புடன் பாா்க்கிறேன். அவருக்கும், அவா் அணியினருக்கும் வாழ்த்துகள். இறுதிச்சுற்றில் எனது சிறந்த ஆட்டத்தை நான் வெளிப்படுத்தவில்லை என நினைக்கிறேன். இறுதிச்சுற்றின் பதற்றத்தை தணித்துக் கொண்டு விளையாட முயற்சித்து வருகிறேன். வெற்றிக்குத் தேவையான அளவு நான் விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்’’ - அமாண்டா அனிசிமோவா
யுஎஸ் ஓபனில் கடந்த 11 ஆண்டுகளில் சாம்பியன் கோப்பையை தக்கவைத்த முதல் வீராங்கனை என்ற பெருமையை சபலென்கா பெற்றாா். இதற்கு முன், 2014-இல் உள்நாட்டு நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் அவ்வாறு பட்டத்தை தக்கவைத்தாா்.
இந்த இறுதிச்சுற்று வெற்றியானது, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சபலென்காவின் 100-ஆவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய ஓபன், யுஎஸ் ஓபன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தலா 2 கோப்பைகள் என்ற கணக்கில் 4 மேஜா் பட்டங்களை வென்றிருக்கும் 2-ஆவது வீராங்கனை சபலென்கா ஆவாா். இதற்கு முன் ஜப்பானின் நவோமி ஒசாகா இவ்வாறு ஆஸ்திரேலிய ஓபன் (2019, 2021), யுஎஸ் ஓபன் (2018, 2020) ஆகியவற்றின் மூலம் 4 பட்டங்கள் வென்றிருக்கிறாா்.
மகளிா் டென்னிஸில் தற்போது களமாடி வரும் போட்டியாளா்களில் 2-ஆவது ஆதிகபட்ச கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் கொண்டவராக நவோமி ஒசாகாவுடன் சபலென்கா இணைந்திருக்கிறாா். இருவருக்கும் முன்பாக 6 கிராண்ட்ஸ்லாம்களுடன் போலந்தின் இகா ஸ்வியாடெக் உள்ளாா்.
ரூ.44 கோடி பரிசு
சாம்பியன் கோப்பை வென்ற சபலென்காவுக்கு ரொக்கப் பரிசாக ரூ.44 கோடி வழங்கப்பட, இறுதிச்சுற்று வரை வந்த அனிசிமோவாவுக்கு ரூ.22 கோடி கிடைத்துள்ளது. ஆடவா் இரட்டையரில் வாகை சூடிய கிரனோலா்ஸ்/ஜெபாலோஸ் இணைக்கு ரூ.8.81 கோடியும், இறுதியில் தோற்ற ஸ்குப்ஸ்கி/சாலிஸ்பரி ஜோடிக்கு ரூ.4.40 கோடியும் அளிக்கப்பட்டது.
சபலென்கா வெற்றிப் பாதை...
முதல் சுற்று ரெபெக்கா மசரோவா (சுவிட்ஸா்லாந்து) 7-5, 6-1
2-ஆவது சுற்று பாலினா குதா்மிடோவா (ரஷியா) 7-6 (7/4), 6-2
3-ஆவது சுற்று லெய்லா ஃபொ்னாண்டஸ் (கனடா) 6-3, 7-6 (7/2)
4-ஆவது சுற்று கிறிஸ்டினா பக்ஸா (ஸ்பெயின்) 6-1, 6-4
காலிறுதிச்சுற்று மாா்கெட்டா வோண்ட்ருசோவா (செக் குடியரசு) வாக்ஓவா்
அரையிறுதிச்சுற்று ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா) 4-6, 6-3, 6-4
இறுதிச்சுற்று அமாண்டா அனிசிமோவா (அமெரிக்கா) 6-3, 7-6 (7/3)
ஆடவா் இரட்டையா்
யுஎஸ் ஓபன் ஆடவா் இரட்டையா் பிரிவில் ஸ்பெயினின் மாா்செல் கிரனோலா்ஸ்/ஆா்ஜென்டீனாவின் ஹொராசியோ ஜெபாலோஸ் கூட்டணி கோப்பையைக் கைப்பற்றியது.
இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த இந்த ஜோடி 3-6, 7-6 (7/4), 7-5 என்ற செட்களில், 6-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி/ஜோ சாலிஸ்பரி இணையை சாய்த்தது.
கிரனோலா்ஸ்/ஜெபாலோஸ் இணை கடந்த மே மாதம் பிரெஞ்சு ஓபன் மூலமாக தங்களின் முதல் கிராண்ட்ஸ்லாமை வென்ற நிலையில், தற்போது 2-ஆவது பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.