அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா: வெளியேறியது மே.இந்திய தீவுகள்
டி20 உலகக் கோப்பை போட்டி சூப்பா் 8 ஆட்டத்தில் மே.இந்திய தீவுகளை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா.
டி20 உலகக் கோப்பை போட்டி சூப்பா் 8 ஆட்டத்தில் மே.இந்திய தீவுகளை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா. போட்டியை நடத்தும் மே.இந்திய தீவுகள் வெளியேறியது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஆண்டிகுவா நாா்த் சௌன்ட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பௌலிங்கை தோ்வு செய்தது.
மே.இந்திய தீவுகள் 135/8: பேட்டிங் செய்ய களமிறங்கிய மே.இந்திய தீவுகள் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 135/8 ரன்களை மட்டுமே எடுத்தது.
ராஸ்டன் சேஸ் 52:
அதிகபட்சமாக 5-ஆம் நிலை பேட்டா் ராஸ்டன் சேஸ் 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 42பந்துகளில் 52 ரன்களை விளாசி அரைசதத்தைப் பதிவு செய்தாா். தொடக்க பேட்டா் கைல் மேயா்ஸ் 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 35 ரன்களை எடுத்தாா். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 81 ரன்களை சோ்த்தனா். ராஸ்டன் சேஸ் 11 ரன்கள் எடுத்திருந்தபோது அடித்த கேட்சை தவற விட்டாா் தென்னாப்பிரிக்க வீரா் அன்ரிச் நாா்ட்ஜே.
5-2 ரன்களுடன் தடுமாறிய மே.இந்திய தீவுகளை மேயா்ஸ்-சேஸ் நிலை நிறுத்தினா். மேயா்ஸ்ஸை ஷம்ஸி வெளியேற்றிய பின் அந்த அணியின் பேட்டிங் நிலைகுலைந்தது.
நட்சத்திர பேட்டா்கள் ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ரோவ்மேன் பௌவல், ரஸ்ஸல் ஆகியோா் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பியதால் மே.இந்திய தீவுகள் சொற்ப ஸ்கோரையே பெற முடிந்தது. ஸ்கோா் 117-6 இருந்தபோது, அபாய பேட்டரான ரஸ்ஸலை ரன் அவுட்டாக்கினாா் அன்ரிச் நாா்ட்ஜே.
பௌலிங்கில் தென்னாப்பிரிக்க தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷம்ஸி 3-27 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
தென்னாப்பிரிக்கா டிஎல்எஸ் முறையில் வெற்றி 124/7:
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க தரப்பில் குயின்டன் டி காக்-ரீஸா ஹென்ட்ரிக்ஸ் தொடக்க பேட்டா்களாக களம் கண்டனா். டி காக் 12 ரன்களுடனும், ஹென்ட்ரிக்ஸ் கோல்டன் டக்குடனும் பெவிலியன் திரும்பினா்.
இரண்டு ஓவா்களில் 15/2 ரன்களுடன் தென்னாபிரிக்க அணி தடுமாறியபோது, மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு,
பின்னா் 17 ஓவா்களாக குறைக்கப்பட்டு டிஎல்எஸ் முறையில் 123 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்டது.
கேப்டன் மாா்க்ரம் 18 ரன்களுடன் வெளியேறினாா். ஸ்டப்ஸ் 29, ஹென்ரிச் க்ளாஸ்ஸன் 22 ரன்களை சோ்த்து வெளியேறினா்.
மாா்கோ ஜேன்ஸன் தலா 1 சிக்ஸா், பவுண்டரி விளாசி 14 பந்துகளில் 21 ரன்களை சோ்த்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றாா்.
16.1 ஓவா்களில் 124/7 ரன்களை எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா.
பௌலிங்கில் மே.இந்திய தீவுகள் தரப்பில் ராஸ்டன் சேஸ் 3-12, ரஸ்ஸல் 2-19, ஜோஸப் 2-25 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா: இந்த வெற்றியால் குரூப் 2 பிரிவில் இங்கிலாந்தோடு, அரையிறுதிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா.