சென்னை, மே 11: மனிதர்களுள் அதிசயப் பிறவி மறைந்த தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஏ.எஸ்.தம்பையா என்று மருத்துவ நிபுணர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.
அரசு பொது மருத்துவமனையில் 32 ஆண்டுகள் பணியாற்றி ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்த "டாக்டர் ஆர்தர் சரவணமுத்து தம்பையா' (87), சென்னையில் புதன்கிழமை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எழும்பூர் வெஸ்லி தேவாலயத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. டாக்டர் தம்பையாவுக்கு மூத்த சகோதரி லீலா மாத்யூ உள்பட உறவினர்கள் உள்ளனர்.
1924-ம் ஆண்டு பிறந்து, "மருத்துவமே சேவை, சேவையே மருத்துவம்' என்று திருமணமே செய்து கொள்ளாமல் தோல் மருத்துவத்துக்கு 60 ஆண்டுகள் சேவை செய்த பிதாமகன் டாக்டர் ஏ.எஸ்.தம்பையா. எளிமை, இரக்கம், ஒழுக்கம், செய்யும் தொழிலே தெய்வம் என்ற கோட்பாடு, நேரம் தவறாமை, அசாத்திய அறிவுத்திறன்-திறமை-நினைவாற்றல், அச்சமற்ற தன்மை ஆகிய அனைத்தையும் ஒருங்கே பெற்று மருத்துவ உலகுக்கு முன் மாதிரியாக விளங்கியவர் டாக்டர் தம்பையா.
சென்னை மருத்துவக் கல்லூரியில் 1946-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தார். லண்டன் சென்று ராயல் கல்லூரியில் தோல் மருத்துவத்தில் எம்.ஆர்.சி.பி. படிப்பை தென்னிந்தியாவில் வெற்றிகரமாக முடித்த முதல் டாக்டர் என்ற கௌரவத்தைப் பெற்றார். டாக்டர் பி.சி.ராய் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
அரசு பொது மருத்துவமனையில் முத்திரை: சென்னை அரசு பொது மருத்துவமனையில் 1951-ம் ஆண்டில் அவசர சிகிச்சைப் பிரிவு, உள்ளுறை மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ.) என பணியைத் தொடங்கிய டாக்டர் தம்பையா, 1961-ல் தோல் மருத்துவத் துறை தலைவராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 21 ஆண்டுகள், அதாவது 1982-ம் ஆண்டு வரை அரசு பொது மருத்துவமனை தோல் மருத்துவத் துறையின் தலைவராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றார்.
ஞாயிறுகூட விடுமுறை கிடையாது: காலை 6 மணிக்கு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்பு, காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை, உணவு இடைவேளைக்குப் பிறகு தோல் மருத்துவ ஆய்வுப் பணி என அரசு மருத்துமனையில் அயராது தொடர்ந்து சேவை செய்தவர் அவர். அரசு மருத்துவ சேவை செய்தபோது, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களும் ஆண்டு முழுவதும் சரியாக காலை 7 மணிக்கு புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கி விடுவார்.
"கிளினிக்'-ஆக மாறிய இல்லம்: அரசுப் பணியிலிருந்து 1982-ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் ஹோட்டலுக்கு எதிர்புறம் தனது இல்லத்தின் கீழ்ப் பகுதியை "கிளினிக்காக' மாற்றி தோல் மருத்துவ சேவையைத் தொடர்ந்தார். தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். ஞாயிறு, கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டுமே கிளினிக் விடுமுறை. அவரிடம் சிகிச்சை பெற ஆந்திர மாநிலம் உள்பட பல்வேறு இடங்களிலிருந்து காலை 5 மணிக்கே வந்து நோயாளிகள் காத்திருப்பது வழக்கம்.
பிரமுகர்கள் வாழ்ந்த இல்லம்: சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அவர் வசித்து வந்த இல்லத்தை (கதவிலக்கம் 938) முதலில் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் கட்டினார். அவரிடமிருந்து பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் கிருஷ்ணமேனன் வாங்கினார். அவரிடமிருந்து தம்பையா குடும்பத்தினர் வாங்கினர். ஆக, இந்த இல்லத்துக்கு 100 ஆண்டுக்கால பெருமை உண்டு.
டாக்டர் ஏ.எஸ்.தம்பையாவின் தோல் மருத்துவ சேவை குறித்து மருத்துவ நிபுணர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.
தோல் மருத்துவ நிபுணர் கமலம்: "மிகச் சிறந்த தோல் மருத்துவ ஆசிரியராக விளங்கியவர் டாக்டர் தம்பையா. நானும் (டாக்டர் கமலம்) டாக்டர் தம்பையாவும் சேர்ந்து 160 சர்வதேச தோல் மருத்துவ ஆய்வு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளோம். நாங்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்த மூன்று பூஞ்சைக் காளான் நோய்க் கிருமிகள் அமெரிக்க அட்லாண்டாவில் உள்ள நோய்க் கிருமி வளர்ப்பு மையத்தில் இடம்பெற்றுள்ளன.
பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆர்.வெங்கடசாமி: மனிதர்களுள் அதிசயப் பிறவியாக விளங்கியவர் டாக்டர் ஏ.எஸ்.தம்பையா. நேர்மை, எதற்கும் பயப்படாத தன்மை, எதற்காகவும் யாரிடமும் பரிந்துரைக்குச் செல்லாத தன்மை, அறிவுத்திறன் ஆகியவை டாக்டர் தம்பையாவின் சிறப்புகள் ஆகும்.
வியாழக்கிழமை அஞ்சலிக் கூட்டம்: தோல் மருத்துவ நிபுணர்கள் பேட்ரிக் ஏசுடையான், ஜானகி, அகஸ்டின், கே.தியாகராஜன், மகாலிங்கம், மதீந்திரன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வி.கனகசபை, தோல் மருத்துவ துறைத் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தலைமையில் டாக்டர் தம்பையாவுக்கு நினைவு அஞ்சலிக் கூட்டம் சென்னை மருத்துவக் கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் வியாழக்கிழமை (மே 12) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.