புயலால் சேதமடைந்த தரைப் பாலம்: பரிசலில் ஆற்றைக் கடக்க சிரமப்படும் மக்கள்
கள்ளக்குறிச்சி, ஜன. 29: பரமநத்தம் கல்லேரிக்குப்பத்தில் ஆற்றின் குறுக்கே மூரார்பாளையத்தை இணைக்கும் வகையில் இருந்த தரைப்பாலம் "தானே' புயலால் சேதம் அடைந்தது. இதையடுத்து அக்கிராம மக்கள் இக்கரையில் இருந்து
கள்ளக்குறிச்சி, ஜன. 29: பரமநத்தம் கல்லேரிக்குப்பத்தில் ஆற்றின் குறுக்கே மூரார்பாளையத்தை இணைக்கும் வகையில் இருந்த தரைப்பாலம் "தானே' புயலால் சேதம் அடைந்தது. இதையடுத்து அக்கிராம மக்கள் இக்கரையில் இருந்து அக்கரைக்கு பரிசலில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டணம் கொடுத்து பரிசலில் செல்லும் அக்கிராம மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். விரைவில் பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சேதம் அடைந்த பாலத்தை ஞாயிற்றுக்கிழமைஆய்வு செய்த அரசுக் கொறடா பா. மோகன், 3 நாள்களில் தாற்காலிக பாலம் அமைக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
புயலால் சேதம்: கள்ளக்குறிச்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பரமநத்தம் கல்லேரிக்குப்பம் தரைப்பாலம் "தானே' புயல் மற்றும் மழையால் அடித்துச் செல்லப்பட்டது. மூரார்பாளையத்தில் இருந்து கல்லேரிக்குப்பம், சித்தேரிப்பட்டு, பழையனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு இந்த தரைப்பாலத்தின் வழியாகத்தான் செல்லவேண்டும். பாலம் உடைந்ததால் இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல மக்கள் பரிசலை பயன்படுத்தி வருகின்றனர். சிலர் நீந்திச் செல்கின்றனர்.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் கூலி வேலைக்குச் செல்லும் மக்களும் விவசாயிகளும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
பரிசலில் செல்ல நபருக்கு ரூ. 2-ம், பரிசலில் சைக்கிள்களை ஏற்றிச் செல்ல ரூ. 5-ம், மோட்டார் சைக்கிளுக்கு ரூ. 20-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் கொடுத்துச் செல்வதற்கு மக்கள் தயாராக இருந்தாலும்கூட பரிசல் வைத்திருக்கும் நபர் சில சமயங்களில் வருவதில்லை. அந்த நேரங்களில் மக்கள் சுமார் 20 கி.மீ. தூரம் பல்வேறு கிராமங்களை சுற்றி மூரார்பாளையம் செல்ல வேண்டும்.
குறுகிய காலத்தில் சேதம் அடைந்த பாலம்: இந்தப் பாலம் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ. 37 லட்சம் செலவில் கட்டப்பட்டது. 2010-ல் பயன்பாட்டுக்கு வந்தது. ஒன்றரை ஆண்டிலேயே பாலம் சேதம் அடைந்துள்ளது. கல்வராயன் மலையில் மணிநதி உற்பத்தியாகி சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்கதா அணையில் தண்ணீர் வந்து சேருகிறது.
அக்கிராம மக்கள் ஆற்றில் மணல் அளவுக்கு அதிகமாக அள்ளியதால் பாலம் வலுவிழந்து விட்டதாவும் தெரிவிக்கின்றனர். சரியான முறையில் கட்டப்படாததால் இந்த நிலை ஏற்பட்டது என்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பாலம் துண்டிக்கப்பட்டதால் கடந்த 29 நாள்களாக அவதிப்பட்டு வரும் மக்கள் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு மீண்டும் பாலம் அமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோகன் ஆய்வு: இந்நிலையில் அரசு தலைமைக் கொறடா ப. மோகன் இந்தப் பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒன்றிய குழுத் தலைவர் அ. ராஜசேகர், மாவட்ட கவுன்சிலர்கள் க. மணி, ராயப்பன், ஊராட்சித் தலைவர் எம்.ஜி. ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ச. சேகர், தி. இளங்கோ, பொறியாளர்கள் செ. அருண்ராஜ், வி. பழனிச்சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
3 நாள்களில் தாற்காலிக பாலம்: மக்கள் நடந்து செல்லும் வகையில் உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி தாற்காலிகமாக பாலம் அமைக்க 3 நாள்களுக்குள் ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.