முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் பிரச்னை: யார் காரணம்?

சென்னை, ஜூலை 22: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதற்கு ஊதிய உயர்வு இல்லாதததும், உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியதுமே காரணம் என டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர

Updated On : 19 செப்டம்பர், 2012 at 11:03 PM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:42 PM

சென்னை, ஜூலை 22: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதற்கு ஊதிய உயர்வு இல்லாதததும், உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியதுமே காரணம் என டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.

 கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை, கோவை உள்பட பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மது பாட்டில்களின் லேபிள்களில் அச்சடிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

 அதன் அடிப்படையில் கோவையில் 133 ஊழியர்களும், சென்னையில் 251 ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்

Advertisement

 பட்டனர்.

 தமிழகத்தில் சுமார் 6 ஆயிரத்து 900 டாஸ்மாக் கடைகள் உள்ளன, அதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கென்று பணிவிதிகளோ, கட்டுப்பாடுகளோ எதுவும் கிடையாது. இதனால் மது விலையை நிர்ணயிக்கும் பொறுப்பையும் அவர்களே எடுத்துக் கொண்டனர்.

 வயிற்றுப் பிழைப்புக்காக தள்ளுவண்டியில் வாழைப் பழம் விற்பவரிடம் 2 ரூபாய் பேரம் பேசும் குடிமகன்கள், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.20 கூட அதிகம் தந்து குடிக்கின்றனர்.

 கடந்த ஆண்டின் டாஸ்மாக் வருமானம் ரூ.18 ஆயிரம் கோடியை எட்டியது. இந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கேரளத்திலும் மாநில அரசே மதுபானக் கடைகளை நடத்துகிறது. ஆனால் அங்கு மதுக் கடைகள் முறைப்படுத்தப்பட்டு விற்பனை ரசீது வழங்கப்படுகிறது. லேபிள்களில் அச்சடிக்கப்பட்ட விலையை விட ஒரு ரூபாய் கூடுதலாக விற்றால் கூட அங்குள்ள மக்கள், சம்பந்தப்பட்ட ஊழியர்களை சட்டத்தின் முன் நிறுத்தி விடுவார்கள்.

 தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை ரசீது வழங்கப்படாததால் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

 ஊழியர்கள் விளக்கம்: டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து ஊழியர்கள் சிலர் தெரிவித்ததாவது: சில நாள்களுக்கு முன் டாஸ்மாக் கடைகளில் நடந்த ஆய்வில், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக 384 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளிலும் அதிக விலைக்குத்தான் மது விற்கப்படுகிறது.

 டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரின் சம்பளம் ரூ.5 ஆயிரம் மட்டுமே. அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதற்கும் குறைவான சம்பளம். மேலும் உயர் அதிகாரிகளுக்கு மாதாமாதம் கப்பம் கட்ட வேண்டும். இதன் காரணமாகவே மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்கிறோம் என்றனர்.

 இது குறித்து சிஐடியூ டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொது செயலாளர் திருச்செல்வன் கூறுகையில், "கேரளத்தில் 500-க்கும் குறைவான மதுக் கடைகள்தான் உள்ளன. அதன் மூலம் கேரள அரசுக்கு கிடைக்கும் வருமானம் ரூ.4 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.6 ஆயிரம் கோடி. ஆனால் அங்குள்ள மதுபானக் கடை மேற்பார்வையாளருக்கு சம்பளம் ரூ.22 ஆயிரம்.

 தமிழகத்தின் நிலைமை தலைகீழாக உள்ளது. இங்குள்ள ஊழியர்களுக்கு பணிநிரந்தரம், ஊதிய உயர்வு ஏதுமில்லை. இதன் காரணமாகவே அவர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். கூடுதல் விலைக்கு விற்பதை நியாயப்படுத்தவில்லை. போதிய ஊதியம் கொடுத்து, விற்பனையை முறைப்படுத்தினால் இதை தவிர்க்கலாம். தவறுக்கு எல்லோரும் காரணம். ஆனால் ஊழியர்களை மட்டும் சஸ்பெண்ட் செய்தது நியாயமல்ல.

 அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு: டாஸ்மாக்கின் கடை நிலை ஊழியர்களிடம் மாமூல் வாங்கும் உயர் அதிகாரிகள் மற்றும் பார் உரிமையாளர்களால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.

 மது வகைகளை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதாலும், "பார்' விதிகளைப் பின்பற்றாமல் அதிக விலைக்கு விற்பதாலும் அரசுக்கு சேர வேண்டிய தொகை தனி நபர்களிடம் சேருகிறது. இவற்றையெல்லாம் முறைப்படுத்த வேண்டும்' என்றார் அவர்.

 டாஸ்மாக் கடைகளில் நடத்தப்படும் ஆய்வு குறித்து சென்னை பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், சிஐடியூ மாநில பொது செயலாளருமான செüந்தரராஜன் கூறுகையில், "டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்ய தனிக்குழு உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் அதற்கு தொடர்பில்லாத வேறு துறையைச் சேர்ந்த பலரும் ஆய்வுக்கு வருகின்றனர். இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்' என்றார் அவர்.

 இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், "சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் 14 வயதிலிருந்து 21 வயது வரை உள்ள மாணவர்கள் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவது அதிகரித்துள்ளது தெரியவந்தது. மேலும் அந்த ஆய்வில் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மது விலக்கை அமல்படுத்த வேண்டிய அரசு, வருமானத்துக்காக அதை ஊக்குவிப்பது வேதனையளிக்கிறது' என்றனர்.

கோரிக்கை வைத்தால் பரிசீலிக்கப்படும்: அமைச்சர்

 டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தொழிலாளர் நலத் துறை அமைச்சர் எஸ்.டி.செல்லபாண்டியன் கூறியதாவது:

 டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் இவ்வளவுதான் என்பதை ஒப்புக்கொண்டுதான் அவர்கள் பணியில் சேர்ந்தனர். ஊதியம் குறைவு என்பதைக் காரணம் காட்டி அதிக விலைக்கு விற்பது சரியல்ல. அவர்கள் முறையாகக் கோரிக்கைகள் வைத்தால் அது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என்றார் அவர்.

 "2 மாதங்களில் எலக்ட்ரானிக் ரசீது'

 டாஸ்மாக் கடைகளில் இன்னும் 2 மாதங்களுக்குள் எலக்ட்ரானிக் ரசீது முறை அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சவுண்டய்யா தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கவும், நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுக்கவும் எலக்ட்ரானிக் ரசீது முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மது வாங்க வரும் அனைவருக்கும் ரசீது வழங்கப்பட்டு பாட்டில் லேபிள்களில் அச்சடிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கே விற்பனை செய்யப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.