ஆபத்தான வகுப்பறையில் பயிலும் மாணவர்கள்
புயலில் சேதம் அடைந்து மேற்கூரை ஓடுகள் ஆபத்தான நிலையில்
புயலில் சேதம் அடைந்து மேற்கூரை ஓடுகள் ஆபத்தான நிலையில் உள்ள வகுப்பறையில் மாணவர்கள் கல்விப் பயின்று வருகின்றனர்.
பண்ருட்டி வட்டம், கணிசப்பாக்கம் ஊராட்சியில், சித்திரைச்சாவடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் 65 மாணவர்கள் கல்விப் பயின்று வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் புயல் தாக்கியதில் கடலூர் மாவட்டம் பலத்த சேதம் அடைந்தது. அப்போது, சித்திரைச்சாவடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் ஓட்டு கட்டடத்தில் மரங்கள் விழுந்ததில் கடுமையாக சேதம் அடைந்து ஓடுகள் உடைந்து தொங்கியபடி உள்ளன.
எந்த சமயத்திலும் ஓடுகள் வகுப்பறைக்குள் விழ காத்திருக்கும் நிலையில், வகுப்பறையில் மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் கல்வி போதித்து வருகின்றனர்.
இதன் பின்பகுதியில் புதிய கட்டடம் இருந்தபோதும் மாணவர்களை ஏன் இந்த கட்டடத்தில் அமர வைத்து பாடம் நடத்துகின்றனர் எனத் தெரியவில்லை.
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி வளாகம் சமூகவிரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. சமூகவிரோதிகள் மாலை நேரங்களில் பள்ளி வளாகத்தில் புகுந்து மது அருந்துகின்றனர். பின்னர் மது பாட்டிகல்களை அங்கேயே போட்டு உடைத்து செல்கின்றனர்.
தங்கள் பகுதி பிள்ளைகள்தான் அப்பள்ளியில் படிக்கின்றனர் என்பதுகூட அறியாமல் மது அருந்தி பாட்டில்களை உடைத்து வீசுவதால் பள்ளி மாணவர்கள் பலர் கண்ணாடி ஓடுகள் குத்தி காயம் அடைந்து உள்ளனர்.
மது அருந்தியவர்கள் வீசி சென்ற பாட்டில்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் உடைந்த கண்ணாடித் துண்டுகளை சத்துணவு கூடத்தின் பின்பகுதியில் கொட்டி வைத்துள்ளனர்.
பள்ளிக் கட்டடம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரையில் உரிய நடவடிக்கை இல்லை.
பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் ஆதிக்கம் பள்ளி மாணவர்களை பாதித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புயலால் சேதம் அடைந்த பள்ளிகளை செப்பனிட அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் இதுநாள் வரையில் இந்த கட்டடத்தை யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்குள் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.