முகப்பு
தமிழ்நாடு

அரசு உயர்நிலைப் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளியின் அவலநிலை

வந்தவாசி: வந்தவாசி அருகே கடந்த கல்வியாண்டு எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்போது 118 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே கல்வி கற்பிக்கும் அவலநிலை உள்ளத

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:58 PM
பகிர்:

வந்தவாசி: வந்தவாசி அருகே கடந்த கல்வியாண்டு எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்போது 118 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே கல்வி கற்பிக்கும் அவலநிலை உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்துள்ள நெற்குணம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மொத்தம் 118 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுககு கல்வி கற்பிக்க தமிழ் பாடத்துக்கு ஒரு ஆசிரியர், ஆங்கிலத்துக்கு ஒரு ஆசிரியர், கணிதத்துக்கு 2 ஆசிரியர்கள், அறிவியலுக்கு 2 ஆசிரியர்கள், சமூக அறிவியலுக்கு 2 ஆசிரியர்கள் என மொத்தம் 8 ஆசிரியர்களும், ஒரு தலைமை ஆசிரியரும் பணியில் இருக்க வேண்டும்.

ஆனால் இப் பள்ளியில் கடந்த ஒரு மாதமாக தலைமை ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். இவர் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார். மேலும் கடந்த ஒரு வாரமாக அறிவியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மட்டும் வேறு பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் அயல்பணியில் இப்பள்ளிக்கு வாரம் இரண்டு நாள்கள் வந்து கல்வி கற்பிக்கின்றனர். ஆசிரியர்கள் பற்றாக்குறையால் இப்பள்ளி மாணவர்கள் பள்ளி மைதானத்தில் கும்பல் கும்பலாக அமர்ந்து தாங்களாகவே படித்துக் கொள்ளும் நிலை உள்ளது.

இப் பள்ளியில் கடந்த மாதம் முன்பு வரை ஒரு தலைமை ஆசிரியரும், 2 ஆசிரியர்களும் பணியில் இருந்தனர். ஆனால் அண்மையில் நடைபெற்ற இடமாறுதல் கலந்தாய்வின்போது 2 ஆசிரியர்களும் இடமாறுதல் பெற்றுச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் இப் பள்ளியில் காலிப் பணியிடங்கள் உள்ளது பற்றி கலந்தாய்வில் தெரிவிக்கப்படாததால் ஆசிரியர்கள் எவரும் இப் பள்ளிக்கு இடமாறுதல் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டுமே பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப் பள்ளி மாணவர்கள் கடந்த கல்வியாண்டு எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 17 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவி ஆர்.பி.சரண்யா 500-க்கு 422 மதிப்பெண்கள் பெற்று இப்பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். ஆனால் இப்போது ஆசிரியர்கள் பற்றாக்குறையால் இப்பள்ளி மாணவர்கள் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் இப் பள்ளியில் சத்துணவு செய்ய சமையலறை இல்லாததால் பள்ளி மைதானத்தில் திறந்தவெளியில் சத்துணவு தயாரிக்கப்படுகிறது.

எனவே இப்பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், சத்துணவு செய்ய சமையலறை கட்டித்தர வேண்டும் என்பதே இக் கிராம மக்களின் கோரிக்கை ஆகும்.

அதிகாரி விளக்கம்:  இதுகுறித்து செய்யாறு  மாவட்ட கல்வி அலுவலர்  சொ.சண்முகத்திடம்  கேட்டபோது,  இப் பள்ளிக்கு நிரந்தர  ஆசிரியர்களை நியமிக்கும் பணி கூடிய விரைவில் நடைபெறும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →