சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான சோழவரம், வீராணம் ஏரிகள் முழுமையாக வறண்டதையடுத்து நகரில் குடிநீர் விநியோகம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளிலும் தற்போது நீர் இருப்பு 23 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணா நீர் கால்வாயில் உள்ள உப்பளமடுகு பகுதியில் கால்வாயை சீரமைக்கும் பணிகளை ஆந்திர அரசு மேற்கொண்டு வருவதால் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய கிருஷ்ணா நதி நீர் கடந்த மாதத்தில் நிறுத்தப்பட்டது.
இதனால் வரும் காலங்களில் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கியதிலிருந்தே நகரின் பல இடங்களில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை எனப் புகார்கள் வருகின்றன. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சாலிகிராமம், இந்திரா நகர், கிரீம்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் குடிநீர் வருவதற்கு போதிய அழுத்தம் இல்லை எனக் கூறப்படுகிறது.
விநியோகம் குறைந்தது: சென்னை மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு குழாய் வழியாக 74.5 கோடி லிட்டரும், லாரிகள் மூலமாக 2.2 கோடி லிட்டரும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு மொத்தமாக 83 கோடி லிட்டர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், ஏரிகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் சில நாள்களாக குடிநீர் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது 55 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே நகரில் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது: குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க வாரியத்தின் சார்பில் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மறுசீரமைப்பு முறை: ஏரிகளின் நீர் இருப்பு குறைந்ததால் மறுசீரமைப்பு முறை என்ற புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு பகுதியில் முதல் நாளன்று, குடிநீர் விநியோகத்தின்போது அழுத்தம் அதிகமாக கொடுக்கப்படும். அதற்கு அடுத்த நாளில் குறைந்த அழுத்தத்துடன் குடிநீர் விநியோகம் செய்யப்படும். சுழற்சி முறையில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்படும்.
தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், திரு.வி.க நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட மண்டலங்களில் மட்டுமே மறுசுழற்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஏரிகளில் உள்ள நீர் இருப்பை வைத்து ஜூன் மாதம் வரை சமாளிக்க முடியும் என்றனர்.
லாரி குடிநீர் விநியோகம்
சென்னையில் குடிநீர் வாரியத்தின் மூலம் 335 லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. குடிநீர் பற்றாக்குறையைத் தவிர்க்க தற்போது லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் அளவை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு, 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 33 டேங்கர் லாரிகள் புதிதாக வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் நாளொன்று நகரில் 4 ஆயிரம் முறை லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர நெய்வேலி படுகையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் அப்பகுதி நீர் ஆதாரங்களிலிருந்து 7.5 கோடி லிட்டர் குடிநீர் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 234 ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கைப்பம்புகள் அமைக்கப்பட்டு நீர் எடுக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.