முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் அருகே வியாபாரியிடம் ரூ.1500 லஞ்சம் பெற்ற  சார்பு ஆய்வாளர் கைது

விருதுநகர் அருகே தேநீர் கடை வியாபாரியிடம் ரூ.1500 லஞ்சம் வாங்கிய குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார்

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:25 AM

விருதுநகர் அருகே தேநீர் கடை வியாபாரியிடம் ரூ.1500 லஞ்சம் வாங்கிய குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

     விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் பொன்மலை(45). இவர் இப்பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகின்றாராம். இவரது கடையில் வணிக எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டு உபயோக எரிவாயு உருளையை பயன்படுத்தி வந்தாராம். இவரது கடையில் விருதுநகர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுத் துறையைச் சேர்ந்த சிறப்பு ஆய்வாளர் பாஸ்கரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாராம்.

அப்போது, வீட்டு உபயோக எரிவாயு உருளையை பயன்படுத்தியதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.1500 கொடுத்தால் விட்டு விடுவதாக கடைக்காரரிடம் தெரிவித்தாராம். அதையடுத்து, தன்னிடம் பணம் இல்லையென்றும், மறுநாள் நீங்கள் குறிப்பிடும்  இடத்தில் வந்து கொடுப்பதாக பொன்மலை கூறியுள்ளார். 

Advertisement

    இது தொடர்பாக பொன்மலை விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. வெங்கடேசனிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் பொன்மலையிடம் ரசாயனம் தடவிய மூன்று 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் தமிழ்நாடு அரசு மண்டல போக்குவரத்துக்கழக பணிமனை வளாகம் முன்பு நின்றிருந்த பொன்மலையிடம், அங்கு வந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் ரூ.1500 பணத்தை வாங்கினாராம்.

 அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் பாஸ்கரனை பணம் பெறும் போது கையும் களவுமாக பிடித்து ரசாயனம் தடவிய தாள்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.