முகப்பு
தமிழ்நாடு

பராமரிப்பும் இல்லை; பாதுகாப்பும் இல்லை

சென்னை கலங்கரை விளக்கம் பறக்கும் ரயில் நிலையம் (எம்.ஆர்.டி.எஸ்) பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. மேலும் இந்த ரயில் நிலையத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்வதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:45 AM
பகிர்:

சென்னை கலங்கரை விளக்கம் பறக்கும் ரயில் நிலையம் (எம்.ஆர்.டி.எஸ்) பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. மேலும் இந்த ரயில் நிலையத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்வதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் தினமும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். கடற்கரையிலிருந்து பூங்கா நகர் வரை முதல் மூன்று நிறுத்தங்கள் தரை மட்டத்தில் அமைந்துள்ளன. பூங்கா நகரிலிருந்து ரயில் மேம்பாலம் வாயிலாக சிந்தாதிரிப்பேட்டை நிறுத்தத்தை அடைகிறது. அங்கிருந்து ரயில் பாதை மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் நிலையத்தின் பாதை சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், திருமயிலை, மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூர்பா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி வழியே செல்கிறது.

Advertisement

இதில் கடற்கரை, மயிலாப்பூர், திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய ரயில் நிலையங்களைத் தவிர மற்ற ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. அதிலும் முக்கியமாக கலங்கரை விளக்கம் பறக்கும் ரயில் நிலையம் பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாக காட்சியளிக்கிறது.

கலங்கரை விளக்கம் குறைபாடுகள்: கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்தில் லிஃப்டுகள், எஸ்கலேட்டர்கள் உள்ளன. ஆனால் இதில் லிஃப்டுகள் முழுமையாக இயங்கி பல மாதங்கள் ஆகின்றன. எஸ்கலேட்டர்கள் அவ்வப்போது மட்டுமே இயங்கும்; பின்பு இயங்காது.

இயங்கும் எஸ்கேலட்டர்கள் முழுவதும் எச்சில் கறைகளாலும் துருப்பிடித்தும் அசுத்தமாகக் காட்சியளிக்கின்றது. மேலும் ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பெண்கள் தனியே செல்வதற்கு அச்சப்படும் சூழ்நிலையே நிலவுகிறது. இந்த ரயில் நிலையத்தில் ஏராளமான காலியிடங்கள் இருக்கின்றன. போதிய பாதுகாப்பு இல்லாததால் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாகவும் இரவு நேரங்களில் இந்த ரயில் நிலையம் திகழ்கிறது. ரயில் நிலையத்தில் இருக்கும் குப்பைகளும் அகற்றப்படாமல் இருக்கிறது.

இந்த ரயில் நிலையத்துக்கு வார நாள்களில் அதிகப்படியான கூட்டம் நிரம்பி வழியும். காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சுறுசுறுப்பாக இருக்கும் ரயில் நிலையமே இப்படி பராமரிப்பில்லாமல் காட்சியளிக்கிறது. மேலும் ரயில்வே பாதுகாப்பு படையினர் குறைவாக இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வசதியும் செய்ய முடியாமல் ரயில்வே நிர்வாகம் திண்டாடி வருகிறது.

கலங்கரை விளக்கம் பறக்கும் ரயில் நிலையத்தில் முறையான பாதுகாப்பையும் பராமரிப்பையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments