யானை தாக்கி பலியானோர் இந்தியாவிலேயே கோவைக்கு முதலிடம்
யானை தாக்கி பலியானோரின் எண்ணிக்கை இந்தியாவிலேயே கோவை மாவட்ட வனப் பகுதியில்தான் அதிகம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதோடு சுற்றுச் சூழல் மாறுபாட்டால் யானைகளின் குணாதிசயங்களும் மாறிவிட்டதே இதற்குக் காரணம் என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.
யானை தாக்கி பலியானோரின் எண்ணிக்கை இந்தியாவிலேயே கோவை மாவட்ட வனப் பகுதியில்தான் அதிகம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதோடு சுற்றுச் சூழல் மாறுபாட்டால் யானைகளின் குணாதிசயங்களும் மாறிவிட்டதே இதற்குக் காரணம் என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.
கோவை மாவட்டத்தில் 1999 ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை யானை தாக்கி 199 பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைக் காலமாக யானைக்கும் - மனிதனுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண நம்மிடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Advertisement
தமிழகத்தை பொருத்தவரை கோவை, ஒசூர், தருமபுரி, ஈரோடு, சத்தியமங்கலம் வனப் பகுதிகளில்தான் யானை, மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இதில் கோவை மாவட்ட வனப் பகுதி இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பது வேதனைக்குரியது.
யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதும், காட்டின் இயற்கை வளம் குறைந்து வருவதுமே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணமாகி வருகிறது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் யானைகளின் குணாதிசயங்களும் மாறிவிட்டன.
பொதுமக்களிடம் யானை, காடுகள் குறித்த புரிதல் இல்லாததே இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. இப்போது கோவை மாவட்ட வனப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு யானை குறித்த விழிப்புணர்வு ஓரளவுக்கு இருந்தாலும் யானைகள் மனிதர்களைத் தாக்குவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
சிதறும் யானைக் குடும்பம்: முன்பெல்லாம் வயதான யானையின் தலைமையில் ஒரே கூட்டமாக யானைகள் இடம்பெயரும். இப்போது யானைகளும், மனிதர்களைப் போல கூட்டுக் குடும்ப வழக்கத்தை விட்டுவிட்டன. வயதான யானையின் வழிகாட்டுதலில் மற்ற யானைகள் செல்லும்போது மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. இப்போது பல்வேறு சுற்றுச் சூழல் மாறுதல்களால் யானைக் குடும்பம் சிதறி, சிறு சிறு குழுக்களாக இடம் பெயருகின்றன. ஒரு கூட்டத்தில் முன்பெல்லாம் 20 முதல் 30 யானைகள் இருக்கும். இப்போது 6 முதல் 10 யானைகள் மட்டுமே உள்ளன. இதுவும் மனிதர்களின் மீதான தாக்குதலுக்குக் காரணம் என ஆராயப்பட்டுள்ளது. இது குறித்து இயற்கை பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த (கோவை), பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி கூறியது:
கோவையில் இந்த ஆண்டு இதுவரை 8 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது குறைவுதான் என்றாலும், யானை - மனிதன் மோதலுக்கு நிரந்தரத் தீர்வு இன்னும் காணப்படவில்லை.
காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் தனியார் தங்கும் விடுதிகள் அதிகமாகிவிட்டதால், யானைகளின் வழித்தடம் மறைக்கப்படுகிறது.
மேலும், யானை ஒரே இடத்தில் வசிக்கும் விலங்கினம் அல்ல. அது இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் போன்றவை இல்லாததால் மனிதனின் இடத்தை நோக்கி நகர்கின்றன.
மேலும், யானை மனிதனைத் தாக்குவதற்கு முக்கியமான காரணம் கடந்த 10 ஆண்டுகளில் அவற்றுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல், மனிதனின் ஆக்கிரமிப்பு, இடையூறு போன்றவையே. அதனால், அவை மனிதனை எதிரியாகக் கருதத் தொடங்கிவிட்டன. நமது முன்னோர்கள் யானையைப் புரிந்து கொண்டு வனத்தையும் பாதுகாத்தனர். ஆனால் இப்போதுள்ள நிலைமை வேறு.
யானை மனிதனைத் தாக்காமல் இருப்பதற்கு அகழி வெட்டுவது, மின்வேலி அமைப்பது போன்றவை தாற்காலிக ஏற்பாடுதான்.
யானைகளுக்கு உகந்த சூழலையை ஏற்படுத்தி இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால், யானையையும் மனிதனையும் காப்பாற்றலாம் என்றார் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி.
7 ஆண்டுகளில் 73 பேர் பலி
கோவை மாவட்டத்தில், யானைகள் தாக்கியதில் கடந்த 7 ஆண்டுகளில் 73 பேர் பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக 2010 ஆம் ஆண்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
விவரம்:
20086
20099
201017
20117
201211
201315
20148
காரணம் என்ன?
யானைகள் எதனால் மனிதனைத் தாக்குகின்றன என ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோவை மாவட்ட வன அதிகாரி செந்தில் குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது: யானைகள் நீர் நிலைகளைத் தேடியும், உணவைத் தேடியும் மனிதனின் இடத்துக்கு வருகின்றன. எனவே, வனப்பகுதிக்கு உள்பட்ட இடங்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்போது மூன்று இடங்களில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தண்ணீர்த் தொட்டியில் நிலத்தடி நீர் மோட்டார் மூலம் எடுக்கப்பட்டு தேக்கப்படுகிறது. இந்த மோட்டார்களுக்கு தேவையான மின்சாரம் சூரிய ஒளி மூலம் கிடைக்கிறது.
இந்த ஆண்டு மேலும் 6 தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன. மேலும் யானைக்குப் பிடித்தமான உணவு வகைகள், செடிகள், மரங்கள் போன்றவை வன எல்லையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றையும் மீறி யானைகள் வராமல் தடுப்பதற்கு கோவை மாவட்ட வனப் பகுதி முழுவதும் அகழிகள் வெட்டப்பட்டுள்ளன. யானைகளை விரட்ட 136 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்குத் தேவையான பட்டாசு, உபகரணங்கள் ஆகியவை வனத்துறையின் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் யானைகள் ஊருக்குள் வந்தால் அவற்றை வனத்துக்கு விரட்டி அடிப்பர் என்றார்.