தமிழ்நாடு

வெள்ளத்திலும் கொள்ளையடிக்கும் வியாபார நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை: வேல்முருகன் வேண்டுகோள்

தினமணி

வெள்ளத்தை சாதமாக்கிக் கொண்டு ஈவிரக்கமின்றி கொள்ளையில் ஈடுபடும் வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகரை நூற்றாண்டு காணாத பெருமழை வெள்ளம் மூழ்க வைத்துள்ளது பெரும் வேதனையைத் தருகிறது. சென்னை மாநகரில் பல லட்சக்கணக்கான மக்கள் சொந்த மண்ணில் ஏதிலியராய் தனித்துவிடப்பட்டவர்களாகியுள்ளனர். இந்த மக்களின் துயரத்தில் பங்கேற்று அனைத்து வகையிலான மீட்பு பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தோழர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்தும் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மீட்புப் பணியில் நாட்டின் முப்படைகளும், தமிழக அரசும் ஈடுபட்டு மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இருந்தபோதும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகின்றனர். மக்களின் இந்த பரிதாப நிலை கண்டு திரை அரங்கங்களும் பள்ளிவாசல்களும் திருமண மண்டபங்களும் திறந்துவிடப்பட்டு அவர்களுக்கான தற்காலிக வாழ்விடங்களாக மனிதநேயம் படைத்த நல் உள்ளங்கள் நடவடிக்கை மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.

அதே நேரத்தில் மக்களின் துயரத்தில் தாங்களும் பங்கேற்க வேண்டும் என்ற இரக்க சிந்தனை ஏதுமற்ற சில வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் இதுதான் வாய்ப்பென வழிப்பறிக் கொள்ளை போல கட்டணங்களை மிகக் கடுமையாக உயர்த்தி இருப்பதாக வரும் செய்திகள் கொந்தளிக்க வைக்கிறது.

பால் பாக்கெட்டின் விலை ரூ100, குடிநீர் கேன் விலை ரூ 75; விழுப்புரத்துக்கும் வந்தவாசிக்கும் செல்ல பேருந்துகளில் ரூ1,500, தங்கும் விடுதிகளில் ரூ.2 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என பகல் கொள்ளை அரங்கேறுவதை ஊடகங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன. அல்லலுறும் மக்களை அரவணைக்க வேண்டிய தருணத்தில் கிடைத்தவரை லாபம் என கொடூர சிந்தனையுடன் செயல்படும் இத்தகைய நபர்கள் மீது தமிழக அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பகல் கொள்ளையர்களிடம் பொதுமக்கள் சிக்கிக் கொள்ளாத வகையில் தமிழக அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் என அடிப்படை வசதிகள் அனைத்தையும் எவ்வித தாமதமுமின்றி வழங்கிட போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்திட வேண்டும் என்றும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT