முகப்பு
தமிழ்நாடு

புலிகளின் எண்ணிக்கையில் தமிழகம் 4 ஆவது இடம்!

கடந்த ஆண்டு (2014) புலிகள் கணக்கெடுப்பின்படி, நாட்டிலேயே புலிகளின் எண்ணிக்கையில் தமிழகத்துக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 229 புலிகள் வசிப்பதாக மத்திய அரசின் புலிகள் கணக்கெடுப்பு விவரம் தெரிவிக்கிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

கடந்த ஆண்டு (2014) புலிகள் கணக்கெடுப்பின்படி, நாட்டிலேயே புலிகளின் எண்ணிக்கையில் தமிழகத்துக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 229 புலிகள் வசிப்பதாக மத்திய அரசின் புலிகள் கணக்கெடுப்பு விவரம் தெரிவிக்கிறது.

இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி, கடந்த ஆண்டு தேசிய அளவில் நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை, மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், தற்போது மொத்தம் 2,226 புலிகள் இருப்பதாகவும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

Advertisement

கர்நாடகத்தில் 406, உத்ரகண்ட் 340, மத்தியப் பிரதேசத்தில் 308 புலிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கர்நாடகம், கேரளம், தமிழகம், கோவா மாநிலங்களில் பரந்து விரிந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மொத்தம் 776 புலிகள் உள்ளதாக கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் பாதுகாப்பு சரணாலயங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடந்து வந்தது.

உயிரிழப்பு: தமிழகத்தில் 2014-ஆம் ஆண்டு சத்தியமங்கலம், முதுமலை, ஆனைமலை காப்பகத்தில் 12 புலிகள் இறந்துள்ளன. நாடு முழுவதும் 58 புலிகள் இறந்துள்ளபோதிலும், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

எப்படி நடந்தது கணக்கெடுப்பு?: தமிழக காடுகளின் முக்கிய அம்சமான புலிகளைப் பற்றியக் கணக்கெடுப்பு, முதன்முறையாக டி.என்.ஏ. அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

அறிவியல் வளர்ச்சி காரணமாக டி.என்.ஏ. எனப்படும் உயிரியல் கூறு அடிப்படையில் புலிகளின் எண்ணிக்கையைக் கண்டறியலாம். டி.என்.ஏ. மூலம் கணக்கெடுப்பு மேற்கொள்வதால் எண்ணிக்கை துல்லியமாக இருக்கும். புலி ஆணா, பெண்ணா என்பதையும் கண்டறிய முடியும்.

கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படுவதால், பிற்காலத்தில் வனத்தில் சட்டவிரோதமாகப் புலிகளை யாரேனும் வேட்டையாடி கொண்டு சென்றாலும், அவை கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அந்தப் புலி எந்த வனத்தைச் சேர்ந்தது என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

இதுகுறித்து சூழலியலாளர் ஒருவர் கூறியது: கணக்கெடுப்பு நடத்துவது வரவேற்கக்கூடிய விஷயமாக இருந்தாலும், வனங்களைக் காப்பதிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும்.

உதாரணத்துக்குப் புலிகள் சரணாலயப் பகுதிக்கு பொதுமக்கள் சுற்றுலா செல்வதற்கு முழுமையானத் தடை விதிக்க வேண்டும், அல்லது ஆண்டின் சில நாள்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும்.

காடுகள் பாதுகாக்கப்பட்டால்தான் புலிகளையும் பாதுகாக்க முடியும். காடுகளை அழித்துவிட்டு புலிகள் எண்ணிக்கையைப் பெருக்குவது என்பது சாத்தியமற்ற விஷயம்.

அடர்ந்து வளர்ந்த மரங்களும், புல்லும், புதரும் நிறைந்த காட்டில் அவற்றை உணவாக உண்ணும் முயல், மான், மாடு போன்ற உயிரினங்கள் வாழும். இவற்றின் எண்ணிக்கை கூடும்போது புலியின் உணவுத் தேவை தீர்ந்து அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. இந்த மூன்றும் சங்கிலித்தொடராகத் தொடரும்போதுதான் காடு தன் இயல்பைத் தொலைக்காமல் இருக்கும். இதனால் பருவமழை சரியான காலத்தில் பொழிந்து, ஆறுகள் பெருகி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. இவை எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. நம் ஒவ்வொருவரின் கவனத்துக்கும் அக்கறைக்கும் உரியவை புலிகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்றார்.

புலிகள் எண்ணிக்கை

ஆண்டு 2006 2010 2014

தமிழகம் 76 163 229

கர்நாடகம் 290 300 405

கேரளம் 46 71 136

கோவா 0 0 5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments