கடனாநதி அணை நீர்மட்டம் 28 அடியாக குறைந்தது: நெற்பயிர்கள் கருகும் அபாயம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடனாநதி அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 28 அடியாக குறைந்தது. ஒரு சில தினங்களில் அணை மூடப்படும் சூழல் உருவாகி உள்ளதால் இப்பகுதியில் 4,500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடனாநதி அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 28 அடியாக குறைந்தது. ஒரு சில தினங்களில் அணை மூடப்படும் சூழல் உருவாகி உள்ளதால் இப்பகுதியில் 4,500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாததால் நிகழ் பருவத்தில் எதிர்பார்த்தவாறு அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. நிகழ் கார் பருவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 17000 ஹெக்டேரில் நெல் பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. அணைகளின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாசனத்திற்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து கடும் வெப்பம் நிலவுவதாலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து இல்லாத காரணத்தால் அணைகளில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
நிகழ் கார் பருவத்தில் கடனாநதி அணையின் மூலம் ஆம்பூர் மஞ்சப்புளி கால்வாய், அரசபத்து கால்வாய், ஆழ்வார்குறி்ச்சி கால்வாய், பெருங்கால், காக்கநல்லூர் கால்வாய், காங்கேயம் ஆகிய கால்வாய்கள் மூலம் சுமார் 4,500 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.
அணையிலிருந்து ஆரம்பத்தில் 110 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் பாசனத்திற்கு 70 கனஅடி மட்டும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திங்கள்கிழமை அணையின் நீர்மட்டம் 28 அடியாக குறைந்து காணப்படுகிறது.
அணையில் 20 அடிக்கு சேறும், சகதியும் இருப்பதால் தொடர்ந்து அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 30 கனஅடிதான் நீர்வரத்து உள்ளது. ஒரு சில தினங்களில் அணை மூடப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலர் ஆர். கசமுத்து கூறியதாவது: போதிய மழை இல்லாததால், அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. தற்போது கடனாநதி பாசனத்தில் அனைத்து பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் மேட்டுப் பகுதியில் நெற்பயிர்கள் கருகி விட்டன. நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் நிகழ் கார் பருவத்தில் நெற்பயிரை காப்பாற்ற முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம். இதேநிலை நீடித்தால் இப்பாசனத்தில் சாகுபடி செய்துள்ள 4,500 ஏக்கர் நெற்பயிரும் கருகும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர் என்றார் அவர்.
அணைகளின் நீர்மட்டம்: திங்கள்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 52.25 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 65.12 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 59.50 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 34.50 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 57.51 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 57.25 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 25.37 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 22.75 அடியாகவும் இருந்தது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 481.83 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 359 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 24.45 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 5 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு 3 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பாபநாசம் அணையிலிருந்து 504.75 கனஅடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து 250 கனஅடியும், ராமநதி அணையிலிருந்து 40 கனஅடியும், கருப்பாநதி அணையிலிருந்ந்து 10 கனஅடியும், குண்டாறு அணையில் 5 கனஅடியும், அடவிநயினார் அணையில் 25 கனஅடியும், வடக்குப் பச்சையாறு அணையில் 10 கனஅடியும், கொடுமுடியாறு அணையில் 30 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.