முகப்பு
தமிழ்நாடு

கைவிடப்பட்ட பராமரிப்புப் பணி: பாழ்படும் மாநகராட்சி பூங்காக்கள்

பராமரிப்புப் பணிகள் கைவிடப்பட்டதாலும், வெப்பத் தாக்குதலாலும் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பெரும்பாலான

Updated On : 31 டிசம்பர், 2017 at 2:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:58 PM

பராமரிப்புப் பணிகள் கைவிடப்பட்டதாலும், வெப்பத் தாக்குதலாலும் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பெரும்பாலான பூங்காக்கள் பாழ்பட்டு வருகின்றன. அவற்றை உரிய முறையில் பராமரித்து பாதுகாத்திட மாநகராட்சி நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
 சென்னையில் ஆரோக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களில் மாநகராட்சிப் பூங்காக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் மொத்தமுள்ள 563 பூங்காக்களில் 357 பூங்காக்களின் பராமரிப்பை மாநகராட்சி நிர்வாகமே மேற்கொண்டு வருகிறது. 164 பூங்காக்கள் வெளிநபர்கள் பங்களிப்புடனும், 42 பூங்காக்கள் தனியாரிடமும் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இந்தப் பூங்காக்கள் அனைத்திலும் காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைப்பயிற்சி செய்கின்றனர்.
 பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் குழந்தைகள் குதூகலத்துடன் விளையாடி மகிழ்கின்றனர். அங்குள்ள யோகா மேடை நடுத்தர வயதினருக்கும் முதியவர்களுக்கும் பெருமளவில் பயனளித்து வருகிறது. இவை தவிர, உடல் சோர்வு காரணமாக ஓய்வெடுக்க விரும்புபவர்களும் இந்த பூங்காக்களை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கக் கூடிய இந்த பூங்காக்களில் பெரும்பாலானவை போதிய பராமரிப்பின்மை காரணமாகவும், வெப்பத் தாக்குதலாலும் பாழ்பட்டு வருவதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.
 குறிப்பாக, மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு மிக அருகில் பெரியமேட்டிலுள்ள மைலேடீஸ் பூங்காவில் போதிய தண்ணீர் வசதியில்லை. இதனால் புல்தரைகள் காய்ந்து கருகி வருகின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. நடைபாதை நடப்பதற்கு ஏற்ற வகையில் இல்லாமல் ஆங்காங்கே உடைந்து கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன.
 பூங்காவிலுள்ள பெரும்பாலான மின்விளக்குகள் எரியாததுடன், மின்பெட்டிகள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்த நிலையில் குழந்தைகள் எளிதில் தொடும் உயரத்திலேயே உள்ளன.
 தண்ணீர் இல்லாததால் கழிப்பிடங்கள் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. நீர்வீழ்ச்சி அமைப்புகளும் உபயோகமின்றி உள்ளன. தவிர, இந்த பூங்கா மாலை 6 மணிக்கு மேல் சமூக விரோதிகளின் மதுக்கூடமாகவும் மாறி வருவதாக இப்பூங்காக்களை பயன்படுத்தி வந்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.
 இதேபோல், அண்ணாநகர் மேற்குப் பகுதி பஞ்சரத்னா காலனியிலுள்ள பூங்கா, பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே உள்ள பூங்கா, சூளை ஏ.பி. தெருவில் உள்ள பூங்கா என பெரும்பாலான மாநகராட்சிப் பூங்காக்களிலும் இத்தகைய அவல நிலை காணப்படுகிறது.
 இதற்கு பராமரிப்புப் பணி கைவிடப்பட்டதே முக்கியக் காரணம் என்றும், பூங்காக்களின் பராமரிப்புப் பணியை மாநகராட்சி நிர்வாகம் நிரந்தரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகராட்சிப் பூங்காக்களை தனியார் வசம் ஒப்படைத்து பராமரித்திட ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பூங்காக்களில் பராமரிப்புப் பணியை ஏற்கும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள், பூங்காவில் தங்கள் பெயரை மட்டும் எழுதி விளம்பரம் செய்து கொள்ளலாம். அந்தவகையில், தற்போது 42 பூங்காக்களின் பராமரிப்புப் பணி தனியாரிடம் அளிக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் முன்வந்தால் வரையறைக்குட்பட்டு பிற பூங்காக்களின் பராமரிப்பும் ஒப்படைக்கப்படும் என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.