தமிழ்நாடு

பிறந்த நாளில் ஆடம்பர விழாக்கள் வேண்டாம்; பொன்னாடைக்கு பதில் புத்தகங்கள்: திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் 

DIN

சென்னை: தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றும் சால்வை, பொன்னாடைக்கு பதில் புத்தகங்களை வழங்குங்கள் என்றும் திமுக தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள விபரம் வருமாறு:

பினாமி ஆட்சிக்கு எதிரான தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், போராட்டக்களங்களை தி.மு.க. தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியத் தலைநகர் டெல்லி வரை இதற்கான குரலை முன்னெடுத்துள்ளோம். மக்களின் விருப்பத்துக்கு மாறான அரசை அமைதி புரட்சி வழியில் அகற்றி, மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற அரசாக தி.மு.க. அரசு அமையும் வரையில் ஜனநாயக வழியிலான இந்தப் போராட்டம் தொடரும்.

கழகத் தோழர்களின் சளைக்காத உழைப்புடனும் ஒத்துழைப்புடனும் தமிழக மக்களின் பேராதரவுடனும் அறவழிப் போராட்ட களத்தைத் தி.மு.கழகம் கட்டமைத்துச் சந்தித்து வரும் நிலையில், இடைக்கால இளைப்பாறுதல் போல என்னுடைய பிறந்தநாளுக்கான வாழ்த்து செய்திகளை கழகத்தினர் பலரும் முன் கூட்டியே தெரிவித்து வருகிறார்கள். இளைஞர் எழுச்சி நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளையும் ஆர்வத்துடன் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் பேனர்கள், கட்-அவுட்டுகள் போன்ற பொது மக்களுக்கு அதிருப்தி ஊட்டும் பிறந்த நாள் அலங்கார ஆடம்பரங்களைக் கண்டிப்பாக, கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும் என்பதையும் ஒவ்வொரு முறையும் வேண்டுகோளாக விடுத்து வருகிறேன்.

என்னுடைய வேண்டு கோளை அன்புக்கட்டளையாக ஏற்றுத் தவறாமல் செயல்படுத்தும் கழக உடன்பிறப்புகளின் கட்டுப்பாடே எனக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசாக கருதுகிறேன்.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வு வளம் பெறுவதற்காக பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி, பேராசிரியர் உள்ளிட்ட கழக முன்னோடிகள் தோளில் சுமந்து தெருத் தெருவாக கைத்தறித்துணிகளை விற்று, அதன் மூலம் கிடைத்த தொகையை நெசவாளர்களுக்கு வழங்கிய பெருமையும் இந்த இயக்கத்திற்கு உண்டு.

காலத்திற்கேற்ற மாற்றங்களின் காரணமாக, தமிழர்களின் உடைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, தோளில் துண்டு அணியும் வழக்கம் குறைந்துவிட்டது. அவரவர் வசதிக்கேற்ற உடைகளை அணியும் சுதந்திரம் மேலோங்கிவிட்ட சூழலில், விழா நாட்களிலும் மேடைகளிலும் சால்வை என்ற பெயரில் பயனற்ற துணியை அணிவிப்பது என்பது பொருளற்ற செயலாக அமைந்துவிடுகிறது. பகட்டான இந்தப் பழக்கத்தைத் தவிர்த்து, கால மெல்லாம் பயனுள்ள வகையில் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கும் பழக்கத்தை மீண்டும் புதுப்பித்துப் பின் பற்றுவோம்.

நீங்கள் வழங்கும் புத்தகங்களில் எனது அறிவை மேலும் விசாலப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, மிகுதியாக சேரும் புத்தகங்களை தமிழகத்தில் உள்ள பல நூலகங்களுக்கும் கொடுத்து உதவி, அதன் மூலம் தமிழக இளைஞர்கள் மகளிர் உள்ளிட்ட அனைவரும் அளவிலாப் பயன்பெறச் செய்ய முடியும்.

என் அன்பு வேண்டுகோளை எப்போதும் ஏற்று கண்டிப்பாக கடைப்பிடிக்கும் கழகத்தினர் இந்த வேண்டுகோளையும் ஏற்று, சால்வைபொன்னாடை போன்ற பகட்டான பரிசுகளைத் தவிர்த்து, மார்ச் 1 ஆம் தேதி இளைஞர் எழுச்சி நாள் முதல் தொடர்ந்து நல்ல புத்தகங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT