ஜெயலலிதா இல்லாத ஒரு மாதம்: தலைகீழாக மாறிய தமிழக அரசியல்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியின் அதிமுக பொதுச் செயலர் பொறுப்பை சசிகலா ஏற்றுக் கொண்டார்.
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியின் அதிமுக பொதுச் செயலர் பொறுப்பை சசிகலா ஏற்றுக் கொண்டார்.
சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு, டிசம்பர் 5ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜெயலலிதா மறைந்து ஒரு சில நாட்கள் அதிமுகவினர் அவரது மறைவால் ஏற்பட்ட துக்கத்தில் இருந்தனர். அதன்பிறகுதான், கட்சி மேலிடத்துக்கு சரியான ஆள் தேவை என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது.
டிசம்பர் 10ம் தேதி அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை, கட்சியின் மூத்த நிர்வாகிகள் போயஸ் தோட்ட இல்லத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சசிகலாவுக்கு மூத்த அமைச்சர்கள் முதல், மாவட்ட நிர்வாகிகள் வரை, அதிமுக பொதுச் செயலராக பதவியேற்குமாறு தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
டிசம்பர் 11ம் தேதி, அதிமுக எம்.பியும் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான் என்று அறிக்கை வெளியிட்டார்.
ஜெயலலிதாவின் மனசாட்சியாகவும், அதிமுகவின் அச்சாணியாகவும் விளங்கியவர் சசிகலாதான். அவர் தான் அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் என்று கட்சியின் செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
மேலும், சசிகலாவை பொதுச் செயலராக அதிமுகவினர் விரைவில் தேர்ந்தெடுப்பார்கள். எனவே, அந்தப் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என அந்தக் கட்சியின் அமைப்புச் செயலரும், செய்தித் தொடர்பாளருமான சி.பொன்னையன் தெரிவித்தார்.
இதற்கிடையே, டிசம்பர் 16ம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நடராஜனை தேர்வு செய்வதற்கு தடை விதிக்கக் கோரி, மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவுக்கு அதிமுக, வி.கே.சசிகலா தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, இரங்கல் தெரிவிக்க இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், டிசம்பர் 7ம் தேதி சென்னை வந்தார். அப்போது, சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறிய ஆறுமுகம் தொண்டமானிடம், கச்சத் தீவு தேவாலயத் திறப்பு விழாவில், குறைந்தது 100 தமிழக மீனவர்களையாவது அனுமதிக்க வேண்டும் என்றும், தனது கோரிக்கையை இலங்கை அதிபரிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் சசிகலா கேட்டுக் கொண்டார்.
சசிகலாவின் கோரிக்கையை, ஆறுமுகம் தொண்டமான், இலங்கை அதிபரிடம் எடுத்துரைத்து, 100 தமிழக மீனவர்களுக்கு அனுமதியும் பெற்றுள்ளார்.
கச்சத்தீவு தேவாலய திறப்பு விழாவுக்கு 100 தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதி அளித்திருப்பதுதான், அரசியல் வாழ்க்கையில் சசிகலாவுக்குக் கிடைத்திருக்கும் முதல் அங்கீகாரம் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே, தேனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில்குமார்-காயத்திரி தம்பதியினர் தங்களது பச்சிளம் பெண் குழந்தையை சசிகலாவிடம் கொடுத்து பெயர் சூட்டுமாறு கூறினர். அந்த குழந்தைக்கு "ஜெயலலிதா" என்று அவரது தோழி சசிகலா பெயர் சூட்டினார். இதை கண்ட அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் தனது அரசியல் பிரவேசத்துக்கு அச்சாணியாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சசிகலா தனித்தனியே கடிதம் எழுதினார்.
இந்த நிலையில்தான், டிசம்பர் 29ம் தேதி மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக் குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க, ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக சசிகலா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதிமொழி ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலராக வி.கே. சசிகலா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவை சந்தித்து தீர்மான நகலை பன்னீர்செல்வமும், தம்பிதுரையும் வழங்கினார்கள். அவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை ஏற்று செயல்பட சசிகலா சம்மதம் தந்துள்ளதாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பிறகு, டிசம்பர் 31ம் தேதி அதிமுக தலைமையகத்தில் நடந்த விழாவில், கட்சியின் பொதுச் செயலராக வி.கே. சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். அதிமுக பொதுச் செயலராக பதவியேற்றுக் கொண்ட சசிகலா, அங்கு, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட, அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இத்தனை காலமும், ஜெயலலிதாவின் தோழி என்று அறியப்பட்ட சசிகலாவின் குரலைக் கேட்க ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் காத்திருந்தனர். அதிமுக பொதுச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்ட சசிகலா, அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். கண்ணீர் மல்க அவர் பேசுகையில், நம் அம்மாவுக்கு இந்த இயக்கம் தான் வாழ்க்கை. ஆனால் எனக்கோ அம்மா தான் வாழ்க்கை என்று தனது பேச்சைத் தொடங்கினார். அவரது இந்த பேச்சு அதிமுக தொண்டர்களை உருகச் செய்தது.
அதிமுக செயலராக பொறுப்பேற்று, கட்சிப் பணியைத் தொடங்கும் முன்பே, அதிமுக பொதுச் செயலர் சசிகலா, தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தார்.
புதிய பொறுப்பில், புதிய மரியாதையும் கிடைத்த மகிழ்ச்சியில், மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் ஜனவரி 4ம் தேதி முதல் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார் வி.கே.சசிகலா. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், எதிர்க்கட்சி என்று எடுத்துக் கொண்டால், திமுகவின் தலைவர் கருணாநிதி உடல்நிலை காரணமாக, நேற்று நடைபெற்ற திமுக பொதுக் குழுவில், கட்சியின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்ற நாளிலேயே, முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து தமிழக பிரச்னைகள் குறித்து பேசினார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசிக் கொண்டதேயில்லை என்ற விதி உடைக்கப்பட்டது. தமிழக அரசியல் கலாச்சாரம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.