27-இல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்
ராமேசுவரம் பேக்கரும்பில் கட்டப்பட்டு வரும் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் நினைவு மணிமண்டபத்தை, ஜூலை 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருப்பதாகவும்,
ராமேசுவரம் பேக்கரும்பில் கட்டப்பட்டு வரும் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் நினைவு மணிமண்டபத்தை, ஜூலை 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருப்பதாகவும், விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராமேசுவரம் தீவு தங்கச்சிமடம் ஊராட்சிக்குள்பட்ட பேக்கரும்பு கிராமத்தில், குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு, மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்பில் ரூ. 50 கோடி மதிப்பில் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், முதற்கட்டமாக ரூ.15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதன் திறப்பு விழா, கலாமின் 2 ஆவது நினைவு தினமான ஜூலை 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மணிமண்டபத்தை திறந்துவைக்க இருப்பதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
பிரதமர் வருகையை முன்னிட்டு, தனுஷ்கோடி, பாம்பன் பாலம், ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.
மணிமண்டபத்தின் இறுதிக் கட்டப் பணிகளை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
மேலும், மணிமண்டபம் அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கடைகள், விளம்பர பேனர்கள் ஆகியனவும் அகற்றப்பட்டன.
மணிமண்டபத்தை திறந்து வைக்க வருகை தரும் பிரதமர் மோடி ரூ. 50 கோடி மதிப்பில், ராமேசுவரம் தீவு முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான கடற்கரையோர சாலையையும் திறந்து வைக்க உள்ளார்.பிரதமருடன் மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள் என பலரும் பங்கேற்க உள்ளதாகவும், முறைப்படியான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.