முகப்பு
தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ். சேர்க்கை: 85 % ஒதுக்கீடு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசாணையை ரத்து

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:26 PM
பகிர்:

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தஞ்சையைச் சேர்ந்த மாணவர் தர்ணீஷ் குமார் சார்பில் அவரது தாயார் சி.கயல்விழி உள்பட 10- க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், 'இந்திய மருத்துவ கவுன்சில் சட்டப்படி, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் தகுதி பட்டியல் வெளியிடப்பட்டு, மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். ஆகையால், மாநில வழி கல்வி, மத்திய வழி கல்வி என்று மாணவர்களைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. மருத்துவ மாணவர் சேர்க்கையில், இந்திய மருத்துவ கவுன்சில் விதியைப் பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, தற்போது 85 சதவீதம் என்ற ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. இது முற்றிலும் பாரபட்சமானது. எனவே, ஜூன் 22- ஆம் தேதி தமிழக அரசின் சுகாதாரம், குடும்ப நலத்துறை வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பின்பு, இந்த வழக்கில் நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்த வழக்கின் அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்த போது, அரசின் இந்த ஒதுக்கீடானது, சம உரிமை கொண்டவர்களிடம் பாரபட்சம் காட்டுவதாக அமைந்துள்ளது.
இது இந்திய அரசியல் சாசனத்தின் ஷரத்து 14- ஐ மீறுவதாக உள்ளது . அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்துவதன் மூலம் சம உரிமை பெற்றுத் தருவது என்ற பெயரில் சம உரிமை பெற்றவர்களை சம உரிமை இல்லாதவர்களாக மாற்றுவது முற்றிலும் சரியான நடவடிக்கை அல்ல.
நீட் தேர்வின் தகுதி மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என, மருத்துவ கவுன்சில் சட்டம் வலியுறுத்தும் போது, தமிழக அரசின் 85 சதவீத ஒதுக்கீடு வழங்கும் நிர்வாக உத்தரவானது, நீட் தேர்வின் நோக்கத்தை நீர்த்துப் போக செய்யும் வகையில் அமைந்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படித்த கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்கு எதிராக இந்த நீதிமன்றம் செயல்படவில்லை.
கிராமப்புற மாணவர்களின் நலனில் நீதிமன்றம் அக்கறை கொள்கிறது. ஆனால், இந்த ஊக்குவித்தல் சட்ட முரணான வழிமுறையில் நிறைவேற்ற முற்படும் போது, குறிப்பாக சமஉரிமை பெற்றவர்கள் இடையே கடுமையாக பாரபட்சத்தை ஏற்படுத்தும் போது நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது. நீட் தேர்வை பொருத்தவரை, நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது. எனவே, ஜூன் 22- ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. புதிதாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தகுதி பட்டியல் வெளியிட்டு, அதன்படி கலந்தாய்வை நடத்த வேண்டும். இந்த உத்தரவு வழக்கு தொடராத அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இவற்றுக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆகையால், இந்த அரசாணையை ரத்து செய்யக்கூடாது என்று தெரிவித்தது குறிப்படத்தக்கது.
மேல்முறையீடு செய்வோம்
மருத்துவ படிப்புகளுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசு உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, இந்தப் பிரச்னையை திமுக உறுப்பினர் க.பொன்முடி எழுப்பினார். அப்போது பேசிய அவர், மருத்துவப் படிப்புகளில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசு உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடக்குமா நடக்காதா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில்:தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது.
அனைவரது உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசு உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இது குறித்த நீதிமன்ற உத்தரவுகளின் முழு விவரங்களும் கிடைக்கப் பெற்ற பிறகு சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை செய்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.
எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு ஒத்திவைப்பு
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டிஎஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதையும், கலந்தாய்வையும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஒத்திவைத்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டிஎஸ். படிப்புகளில் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனையடுத்து நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தும் நோக்கில் ஜூன் 27- ஆம் தேதி முதல் ஜூலை 7- ஆம் தேதி வரை எம்.பி.பி.எஸ், பி.டிஎஸ். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.
ஜூலை 14- ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 17- ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 85 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் இடஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ கூறுகையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஏற்கெனவே திட்டமிட்டபடி தரவரிசைப் பட்டியல் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கலந்தாய்வையும் நடத்த முடியாது. தமிழக அரசு மேல்முறையீடு செய்து, தற்கான தீர்ப்பு வெளியாகும் வரை எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →