முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரம்: அரசு பதிலுக்கு எதிர்ப்பு-திமுக வெளிநடப்பு

நீட் தேர்வு விவகாரத்தில் அரசின் பதிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரம்: அரசு பதிலுக்கு எதிர்ப்பு-திமுக வெளிநடப்பு

நீட் தேர்வு விவகாரத்தில் அரசின் பதிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

நீட் தேர்வு விவகாரத்தில் அரசின் பதிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கியப் பிரச்னைகளை எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு பெரும் பிரச்னையாக உள்ளது. தமிழக அரசு தகுந்த முயற்சி எடுத்து அழுத்தம் கொடுத்து இருந்தால் நீட் தேர்வை தவிர்த்திருக்கலாம். தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 4,675 பேர்தான்.
ஆனால், மாநில பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதியவர்கள் அதிகம். நீட் தேர்வுக்கு விலக்களிக்கக் கோரி இதே சட்டப் பேரவையில் கடந்த பிப்ரவரியில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குச் செல்லாமல் மத்திய அரசிடமே முடங்கிப் போய் விட்டன.
குடியரசுத் தலைவர் தேர்தலைப் பயன்படுத்தி உரிய அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு தடை விதிக்கவும் தமிழக அரசு தவறி விட்டது. இதனால் தமிழக மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துரோகம் செய்து விட்டன. அடுத்து குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல் வருகிறது. இதிலாவது முழு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்குத் தடை பெற வேண்டும் என்றார்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசித்தான் மாநில அரசின் பாடத் திட்டத்தின் கீழ் கல்வி பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. ஆனால் தமிழக அரசு சிறந்த மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாடியது.
இதனால் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்கவில்லை. உயர்நீதிமன்றம் முடிவு செய்யும் என்று அறிவித்தது. அங்கு நமது அரசு தலைமை வழக்குரைஞர் அரை நாள் வாக்குவாதம் செய்தார்.
உயர் நீதிமன்ற தனி நீதிபதி தலைமையிலான பெஞ்சில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
2010-ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தபோதுதான் நீட் தேர்வு நடத்துவதற்கான சுற்றறிக்கையை அகில இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டது. அப்போது இருந்த தி.மு.க. தும்பை விட்டு விட்டது. இப்போது நாங்கள் வாலை பிடித்துக் கொண்டு இருக்கிறோம்.
சட்ட ரீதியாக நாம் போராடுகிறோம். மத்திய அரசிடமும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். பல்வேறு இடர்ப்பாடுகள் இருந்தாலும் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின்: கடந்த 2010 டிசம்பரில் நீட் தேர்வு முறையைக் கொண்டு வந்த போது, அதனை தி.மு.க. எதிர்த்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத்திடம் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். பிரதமருக்கும் கடிதம் எழுதினார். ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைப் போன்று தமிழகமும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதில் நீட் தேர்வுக்கு தடை உத்தரவு பெறப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் இருந்த வரை 'நீட்' தேர்வு தமிழ்நாட்டில் நடைபெறவில்லை.
ஆனால் தற்போது தமிழக அரசு மத்திய அரசுக்கு தகுந்த அழுத்தம் கொடுக்கவில்லை.
அமைச்சர் விஜயபாஸ்கர்: 2010-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அவர்களுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்த போது தான் 'நீட்' தேர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது தி.மு.க.வினர் ஏன் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை. இப்போது எல்லா மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு விட்டன. தமிழகம் மட்டும்தான் அதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது.
துரைமுருகன்: ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று வெற்றி கிடைத்தது. ஆனால் 'நீட்' தேர்வுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற தகுந்த முயற்சி எடுக்கவில்லை. இதற்கு பொறுப்பு ஏற்று நல்வாழ்வு துறை அமைச்சர் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
அமைச்சர் விஜயபாஸ்கர்: முதல்வர் முதல் முறையாக பிரதமரைச் சந்தித்த போதே 'நீட்' தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 2-ஆவது முறையும் அவரைச் சந்தித்த போதும் அழுத்தம் கொடுத்தார். அதன் பிறகு தலைமைச் செயலாளரை அனுப்பி பிரதமரின் தனிச் செயலாளரிடம் இதை வலியுறுத்தினோம். நானும், அதிகாரிகளும் தில்லி சென்று இந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் அழுத்தம் கொடுத்தோம். இப்போதும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
மாற்றுக் கட்சியில் உள்ளவர்கள் தமிழக அரசை எப்படி எதிர்க்கலாம். அடுத்து என்ன அறிக்கை விடலாம் என்பதை மனதில் வைத்து தான் இந்த அரசை குறைசொல்கிறார்கள். நாங்கள் அரசியல் ரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். சட்டப் பேரவைக் கூட்டம் முடிந்ததும் புதன்கிழமை மாலையே சுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தில்லி செல்ல உள்ளோம். அங்கு மத்திய அரசு அதிகாரிகளைச் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
(அமைச்சர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று குரல் கொடுத்தனர்.)
மு.க.ஸ்டாலின்: அமைச்சர் இந்தப் பிரச்னைக்குத் தகுந்த விளக்கம் கொடுக்காமல் மற்ற கட்சியினர் போராட்டத்தைத் தேடி அலைவது போன்று பேசி இருக்கிறார். அமைச்சரின் அந்தப் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: அமைச்சர் பேசும் போது யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் குறிப்பிட்டார். நீங்கள் மத்திய அரசிடம் கூட்டணி வைத்த போதுதான் 'நீட்' தேர்வு வந்தது. அப்போது ஏன் நீங்கள் ராஜிநாமா செய்யவில்லை.
(தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று குரல் கொடுத்தனர்).
பேரவைத் தலைவர் தனபால்: அமைச்சர் பேசியதும் இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் பேசியதும் இருக்கிறது. எனவே எதையும் நீக்க வேண்டிய அவசியம் இல்லை.
மு.க.ஸ்டாலின்: அமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அது மட்டுமல்ல அமைச்சர் பதில் எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அரசும் இந்தப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்புச் செய்கிறோம்.
(இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.)
காங்கிரஸ் வெளிநடப்பு: இதே பிரச்னைக்காக காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளிநடப்புச் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →