தமிழ்நாடு

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் எப்போது?: தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்

DIN

சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த சாதகமான சூழல் ஆராயப்பட்டு வருவதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அப்பதவிக்கான தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி புது தில்லியில் வியாழக்கிழமை முறைப்படி அறிவித்தார். அப்போது, 'தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் எப்போது நடைபெறும்?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்த சாதகமான சூழல் குறித்து ஆணையம் ஆராய்ந்து வருகிறது' என்றார் நஜீம் ஜைதி.
இதையடுத்து, இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நஜீம் ஜைதி, 'இந்த விவகாரத்தில் தொடர்புடைய தரப்பினர் பிரமாணப் பத்திரங்களை ஆணையத்தில் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான தேதியை ஆணையம் முடிவு செய்யும். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்' என்றார் அவர்.
பின்னணி: சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், அதிமுக இரு அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டது. ஏப்ரல் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
ஆர்.கே. நகரில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், அதிகாரிகளின் சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டதாகத் தகவல்களும் வெளியாகின. வருமான வரித் துறையினரும் தங்களது சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பல கோடி பணம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. அதன் பிறகு தேர்தல் நடத்துவதற்கான சூழல் குறித்து தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, அதிமுக தலைமைக்கு உரிமை கோரும் விவகாரத்தில் அஇஅதிமுக என்ற கட்சிப் பெயரையும், அதன் தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஓபிஎஸ் அணி தரப்பிலும், இபிஎஸ் அணி தரப்பிலும் லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் தீபாவின் 'டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை'யின் சார்பிலும் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தும் தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

கெளரவிப்பு...

SCROLL FOR NEXT