முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் அதிமுகவை முடக்க பாஜக சதி: அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம்

தமிழகத்தில் அதிமுக முடக்க பாஜக சதி செய்து வருகிறது என புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Updated On : 24 மார்ச், 2017 at 4:38 PM
பகிர்:

தமிழகத்தில் அதிமுக முடக்க பாஜக சதி செய்து வருகிறது என புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பல மாநிலங்களில் மக்கள் செல்வாக்கு இல்லாத மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியானது ஒவ்வொரு மாநிலத்திலும் துணைநிலை ஆளுநரை கையில் வைத்துக்கொண்டு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் பணியை செய்து வருகிறது. தமிழகத்தில் முற்றிலும் மக்கள் செல்வாக்கு இல்லாத பா.ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்தின் துணையோடு அதிமுகவை முடக்கும் சதி செயலில் ஈடுபட்டு உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஏற்கனவே சின்னஞ்சிறு பிரச்சனைகளை மையப்படுத்தி  அதிமுக ஆட்சியை அகற்றும் வேலையை பா.ஜனதா செய்தது. அதில் தோல்வியுற்றதும் தற்போது தேர்தல் ஆணையத்தின் மூலம் அதிமுக சின்னத்தை தற்காலிகமாக முடக்கும் பணியை பா.ஜனதா செய்துள்ளது. 

Advertisement

மத்தியில் ஆளும் பாஜகவின் கைப்பாவையாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு தேர்தல் சின்னமான இரட்டை இலையை முடக்கம் செய்துள்ளனர்.
தற்போது மோடி தலைமையிலான பாஜக அரசு தற்காலிக அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி அழித்துவிடலாம் என்று பகல் கனவு காண்கிறது.  தேர்தல் ஆணையத்தின செயல்பாடு சர்வாதிகார செயல்பாடாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இழிவான செயல்பாட்டை அதிமுக தொண்டர்கள் முறியடித்து நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரனை வெற்றி பெற செய்வார்கள்.

புதுச்சேரியை பொறுத்தவரை சட்ட ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும்.
புதுச்சேரி அரசின் கண்காணிப்பு இல்லாத செயலால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மூடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் அடையாளமாக திகழ்ந்து வரும் பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயல்பாடுகளை சீர் செய்ய அரசு முன்வர வேண்டும் என்றார் அன்பழகன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.