அதிமுக இணைப்பு: 3-ஆம் தரப்பு மூலம் பேச்சுக்கு முயற்சி: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
அதிமுக இணைப்புக்கு மூன்றாவது தரப்பு மூலம் பேச்சு வார்த்தைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
அதிமுக இணைப்புக்கு மூன்றாவது தரப்பு மூலம் பேச்சு வார்த்தைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
சென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்ற விழாவில் கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகள், மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திங்கள்கிழமை வழங்கினார்.
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறையின் அரசு முதன்மைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் ச.முனியநாதன், கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் தி.ந.வெங்கடேஷ், கோ-ஆப்டெக்ஸ் தலைவர் கே.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப்பின் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறியது: கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டதாக ஏற்கெனவே கூறி விட்டதால், சிறையில் உள்ள சசிகலா, டி.டி.வி.தினகரனை அமைச்சர்கள் சந்திக்கவில்லை.
பேச்சுக்கு நாங்கள் தயார்: அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் ஓ.பி.எஸ். அணியினர் தயாராக இல்லை. பேச வேண்டும் என்ற உணர்வுடன் அவர்கள் முன் வரவேண்டும்.
இரு அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், 3-ஆம் தரப்பு மூலம் பேச்சு நடத்த இனிதான் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வரும் என்று ஓ.பி.எஸ். கூறியிருக்கிறார். ஓ.பி.எஸ்.இன் ஜோதிடம் பலிக்காது.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு 1,560 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். பல்வேறு நலத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில் இந்த அரசு செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை.