கோடை வெயிலில் இருந்து மக்களைக் காக்க முன்னதாகவே தொடங்குகிறது தென்மேற்குப் பருவ மழை
தமிழகத்தில் நிலவி வந்த கடுமையான கோடை வெயிலில் இருந்து மக்களைக் காக்க தென்மேற்குப் பருவ மழை வழக்கத்துக்கு முன்னதாகவே தொடங்குகிறது.
சென்னை: தமிழகத்தில் நிலவி வந்த கடுமையான கோடை வெயிலில் இருந்து மக்களைக் காக்க தென்மேற்குப் பருவ மழை வழக்கத்துக்கு முன்னதாகவே தொடங்குகிறது.
வழக்கமாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் என்பது ஜுன் இரண்டாம் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் வரையிலான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் பெரிய அளவில் மழை இருக்காது என்றாலும், மாநிலத்தின் சில முக்கியமான பகுதிகளில் மழை பெய்வது வழக்கம்.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் மே மாத இறுதியிலேயே தொடங்கிவிட்டது. இதன் எதிரொலியாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் மழை பொழியத் தொடங்கியது. இந்த நிலையில், இன்னும் ஓரிரு நாளில் தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கிவிடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் கடுமையாக வாட்டி வந்த நிலையில், தென்மேற்கு பருவ மழை சீசன் முன்னதாக தொடங்குவதால் பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையிலும் நேற்று சில இடங்களில் மழை பெய்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் தென்மேற்கு பருவமழையினால் பெரிய அளவில் பயனிருக்காது. தென் மாவட்டங்களில் மட்டும் சிறிது மழை பெய்யக்கூடும். எனினும், தமிழகத்தில் பரவலாக தற்போது வறட்சி போன்ற சூழல் காணப்படும் நிலையில், தென்மேற்கு பருவமழையின் மூலமாவது மழை பெய்யாதா என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் உதகை, கூடலூர், பந்தலூர் மற்றும் மஞ்சூர் பகுதிகளில் வலுத்தும், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பரவலாகவும் பெய்யும். கடந்த ஆண்டில், மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை மட்டுமின்றி வடகிழக்குப் பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் மாவட்டத்திலேயே 48 சதவீம்தான் மழைப் பொழிவு இருந்தது.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் பருவ மழை அதிக அளவில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அங்கீகரிப்பதைப்போல நீலகிரி மாவட்டத்தில், கேரள மாநில எல்லையோரப் பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக சாரல் மழை பெய்துள்ளது.
உதகையிலும் பல இடங்களில் பகலில் சாரல் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான தென்மேற்குப்பருவ மழைக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
மாவட்டத்தில், தென்மேற்குப் பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் இருந்தாலும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உதகையில் கோடைசீசனின் முக்கிய நிகழ்ச்சியான உதகை மலர்க்காட்சி முடிவடைந்து விட்ட போதிலும் அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சாரல் மழை, மிதமான மழை எனப் பல்வேறு பருவ நிலைகளால் உதகையில் இதமான காலநிலையே நிலவி வருகிறது.
கேரளாவில்இ ன்று பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் நேற்றே தெரிவித்திருந்தது.
இதுகுறித்து அந்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். சுதேவன் பிடிஐ செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறியிருந்ததாவது, தற்போதைய வானிலை ஆய்வு தகவல்கள், கேரளத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக கூறியிருந்தார்.
கேரளத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் பரவலாக திங்கள்கிழமை காலை முதல் மழை பெய்தது. வடக்குப் பகுதியின் சில இடங்களில் மட்டும் மழை பெய்தது. இந்நிலை, செவ்வாய்க்கிழமை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
கேரளத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் அடுத்த 5 நாள்களில் கனமழையும், இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று எஸ்.சுதேவன் தெரிவித்தார்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்குவது வழக்கம். திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி, தென்மேற்கு பருவமழை செவ்வாய்க்கிழமை பெய்யத் தொடங்கியிருப்பதால் 2 நாள்களுக்கு முன்னதாகவே பருவ மழை தொடங்கியிருப்பதாக அர்த்தமாகும். இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது தமிழக மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.