டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் விடுதியில் தமிழக காவல்துறை குவிப்பு!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் கர்நாடக விடுதியில் தமிழக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் கர்நாடக விடுதியில் தமிழக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இரு அணிகளாக இருந்து செயல்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியஇருவரும் சமீபத்தில் ஒன்றாக இணைந்தனர். உடனே அதிமுக அம்மா அணியின் துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் ஒன்றிணைந்து,முதல்வர் பழனிசாமி மீது தாங்கள் நம்பிக்கையிழந்து விட்டதாக கூறி ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் கடிதம் குடுத்தனர்.
ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே தனது ஆதரவாளர்களை அனைவரையும் டிடிவி தினகரன் முதலில் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்திருந்தார். பின்னர் அங்கிருந்து அனைவரும் கிளம்பி தற்பொழுது கர்நாடக மாநிலம் குடகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகள் இணைந்த பிறகு கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமானது, இன்று சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
அதில் பொதுச் செயலர் பதவியிலிருந்து சசிகலா நீக்கம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதே நேரத்தில் இந்த பொதுக்குழு செல்லாது என்று தெரிவித்த அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலரான டிடிவி தினகரன், ஆட்சி மீதான நம்பிக்கை இழப்பு கடிதம் தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் ஆளுநர் உரிய முடிவு எடுக்கா விட்டால், இந்த ஆட்சியினை அகற்றத் தயங்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
தற்பொழுது டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள தனியார் விடுதியில் தமிழக காவல்துறை குவிக்கப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவை பதிவு எண் கொண்ட இரண்டு டெம்போ டிராவலர்கள் மற்றும் ஒரு டாடா சுமோ ஆகிய வாகனங்களில் போலீசார் அங்கு வந்துள்ளனர். அனைவரும் போலீஸ் சீரூடை இல்லாமல் சாதாரண உடை அணிந்து வந்துள்ளனர்.
நேரடியாக அவர்கள் விடுதியின் உள்ளே சென்று தற்பொழுது விசாரணை செய்து வருகிறாரகள். உள்ளேயிருக்கும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்கள் சொந்த விருப்பத்தின் காரணமாகத்தான் அங்கே தங்கி உள்ளார்களா என்பதை போலீசார் நேரடியாக விசாரிக்கின்றனர்.
அங்கு தங்கி இருப்பவர்களில் 3 பேர் பெங்களூரு சென்றிருப்பதாகவும், மீதம் உள்ளவர்களிம் விசாரணை நடைபெற்று வருகிறது. உள்ளே செல்லும் முன் காவல்துறையினர் எந்த விதமான கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.