முகப்பு
தமிழ்நாடு

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: விரைந்து முடிக்கக்கோரி முறையீடு

தமிழக சட்டப்பேரவையிலிருந்து 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவர்களது தொகுதிகள் காலியாக உள்ளதாகவும்,

Updated On : 10 ஏப்ரல், 2018 at 2:12 AM
பகிர்:

தமிழக சட்டப்பேரவையிலிருந்து 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவர்களது தொகுதிகள் காலியாக உள்ளதாகவும், இந்த வழக்குகளின் தீர்ப்பை விரைந்து அறிவிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பேரவையிலிருந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முதல்வருக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கும் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் ஆஜரான செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன், '18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஓர் ஆண்டுக்கும் மேலாக அவர்களது தொகுதிகள் காலியாக உள்ளன. எனவே, இந்த வழக்குகளின் தீர்ப்பை விரைவாகக் கூற வேண்டும்' என முறையீடு செய்தார்.
இதையடுத்து, 'சட்டப்பேரவை தொடர்பான வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. கோரிக்கையை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.