தமிழ்நாடு

கருணாநிதி மறைவு

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார்.

DIN


திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார்.
ஜூலை 18ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டிரக்யா ஸ்டமி குழாய் மாற்றிப் பொருத்தப்பட்டு, கருணாநிதி வீடு திரும்பினார். 26ஆம் தேதி கருணாநிதி உடல் நலிவுற்றது. உடனே, மருத்துவர்கள் கோபாலபுரம் இல்லத்துக்கு விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து கருணாநிதியின் சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது என்று காவேரி மருத்துவமனை அறிவித்தது. ஜூலை 28ஆம் தேதி கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல் நிலை சீரானது. ஜூலை 29இல் கருணாநிதிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது, மருத்துவ உதவிகளுடன் சீராக்கப்பட்டது.
மாலை 6.10 மணிக்கு உயிர் பிரிந்தது: திங்கள்கிழமை (ஆக. 6) கருணாநிதியின் உடல் நிலை மிகவும் மோசமானது. 24 மணி நேரத்துக்குப் பின்பே அவரது உடல் நிலை குறித்து தெரிவிக்க முடியும் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மருத்துவர்கள் கருணாநிதியின் உயிரைக் காப்பாற்றுவதற்குத் தொடர்ந்து போராடினர். ஆனால், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (ஆக.7) மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.
கோபாலபுரத்தில் உடல்: காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் பதப்படுத்தப்பட்டு, இரவு 9 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. 
ஆம்புலன்ஸ் வாகனத்தை திமுக தொண்டர்கள் செல்லவிடாமல் தடுத்தனர். காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். ஆம்புலன்ஸைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின், குடும்பத்தினர் வந்தனர். இரவு 9.20 மணியளவில் கோபாலபுரம் இல்லத்துக்கு கருணாநிதியின் உடல் கொண்டு வரப்பட்டது. அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் இறுதி மரியாதை செலுத்தினர். நள்ளிரவு ஒன்றரை மணி வரை கோபாலபுரம் இல்லத்திலும் சிஐடி காலனியில் அதிகாலை 3 மணி வரையும் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டது. 
அங்கிருந்து அதிகாலை 4 மணிக்கு அண்ணாசாலை ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
7 நாள்கள் துக்கம்: கருணாநிதி மறைவையொட்டி திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை முதல் 7 நாள்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், திமுக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். 
81 ஆண்டுகால பொதுவாழ்வு: 1924 ஜூன் 3இல் திருக்குவளை கிராமத்தில் பிறந்த கருணாநிதி, 14 வயதில் பொதுவாழ்வுக்கு வந்தார். ஹிந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களைத் திரட்டி அவ்வப்போது பேரணிகளை நடத்தியதுடன் துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
5 முறை முதல்வர்: 1969இல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, 1971, 1989, 1996, 2006 என 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்துள்ளார். தமிழகத்தை நீண்ட காலம் ஆட்சி புரிந்த பெருமைக்குரியவர் கருணாநிதி. 
தோல்வியே காணாதவர்: 1957 முதல் 2016 வரை போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே காணாத கருணாநிதி, 2016இல் மாநிலத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வடக்கின் வழிகாட்டி: தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது' என்கிற முழக்கத்துடன் அரசியலுக்குள் திமுக நுழைந்தது. ஆனால், காலப்போக்கில் மத்தியில் யார் ஆட்சி புரிய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்பவராகக் கருணாநிதி இருந்தார். வடக்குக்கு வழிகாட்டுபவராக அவரே இருந்தார். பிரதமர்களாக வி.பி.சிங், தேவெ கெளடா, மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர்களாக வி.வி.கிரி, கே.ஆர்.நாராயணன் உள்ளிட்டோர் வருவதற்குக் காரணமாக இருந்தவர் கருணாநிதி. பிரதமர் பதவியை அலங்கரிக்கக்கூடிய வாய்ப்பு ஒருமுறை அவருக்கு கிடைத்தும், என் உயரம் எனக்குத் தெரியும்'' என்று தேவெ கெளடாவைப் பிரதமராக்கியவர் கருணாநிதி. 
சிறந்த பேச்சாளர்: திமுகவின் பொதுக்கூட்டங்கள் மாலை நேரப் பல்கலைக்கழகங்கள் என்று கூறப்படுவது உண்டு. அதில் முதன்மைப் பேச்சாளராகத் திகழ்ந்தவர் கருணாநிதி. என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'' என்று தொடங்கி அவர் ஆற்றிய உரைகள் அனைவரையும் கட்டிப்போடுபவையாக இருந்தன.
எழுதாத நாள் இல்லை: சிறந்த எழுத்தாளரான அவர் எழுதாத நாள் என ஒன்று இருந்ததில்லை. உடன்பிறப்புகளுக்கு கடிதம், எதிர்க்கட்சியினருக்குப் பதில் அறிக்கை என எப்போதும் எழுதிக் கொண்டே இருந்தவர். தென்பாண்டிச் சிங்கம்', பொன்னர் சங்கர்' உள்ளிட்ட 6 சரித்திர நாவல்களுடன் பத்துக்கும் மேற்பட்ட சமூக நாவல்களையும் எழுதியுள்ளார். பழனியப்பன்', நச்சுக்கோப்பை', உதயசூரியன்', தூக்குமேடை' உள்பட 21 நாடகங்கள் எழுதியுள்ளார். அரும்பு', குப்பைத்தொட்டி', சாரப்பள்ளம் சாமுண்டி' உள்பட 37 சிறுகதைகள் எழுதியுள்ளார். தொல்காப்பியம், திருக்குறள் போன்றவைக்கு உரை எழுதியுள்ளார். கருணாநிதி தன்னுடைய சுயசரிதையை நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் 6 பாகங்களாக எழுதியுள்ளார். இனியவை இருபது' என்ற பயணநூலையும் எழுதியுள்ளார். கருணாநிதியின் கவிதை நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. 


திரைத்துறையில் சாதனை: வசனகர்த்தா, கதையாசிரியர், தயாரிப்பாளர் என 75 படங்களில் பணியாற்றியுள்ளார். 1947இல் ராஜகுமாரி'யில் தொடங்கி 2011இல் வெளியான பொன்னர்சங்கர்' வரை 64 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றி உள்ளார். பராசக்தி' படத்தில் கருணாநிதி எழுதிய பகுத்தறிவு வசனங்கள் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. கதை வசனப் புத்தகங்கள் முதன்முதலில் அச்சிட்டு வெளியானது பராசக்தி' படத்திலிருந்துதான். கருணாநிதியின் வசனங்களைப் பேசிக் காட்டி, நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்பது அப்போது எழுதப்படாத மரபாக இருந்தது. அப்படி, வசனம் பேசி வாய்ப்பு பெற்று, இப்போது பிரபலமாக இருக்கும் நடிகர்கள் பலர்.
ஓய்வே அறியாதவர்: ஓய்வு என்று கருணாநிதி என்றும் வீட்டில் முடங்கி இருந்தவர் இல்லை. நீண்ட தூரம் ஓடினால்தான், அதிக தூரம் தாண்ட முடியும்' என்பது கருணாநிதிக்குப் பிடித்த பழமொழி. ஆளும்கட்சி வரிசையில் இருந்த காலத்தைவிட எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதுதான் அதிகம் உழைத்தவர். பண்டிகை நாள்களில்கூட அறிவாலயத்தில் அமர்ந்து கட்சிப் பணிகளைப் பார்க்கக் கூடியவர். ஓயாமல் உழைத்த தொண்டன் இங்கு ஓய்வெடுக்கிறான்' என்ற வாசகமே தன்னுடைய கல்லறையில் எழுதப்பட வேண்டிய வாசகம் என்று கருணாநிதி எழுதியுள்ளார்.


உடல் அடக்கத்துக்கு கிண்டியில் 2 ஏக்கர் நிலம்: தமிழக அரசு அறிவிப்பு
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல் அடக்கத்துக்கு சென்னை கிண்டியில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யத் தயார் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்தார்.
சென்னை கடற்கரை சாலையில் அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியின் உடல் அடக்கத்துக்கு இடம் வழங்க வேண்டுமென திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் முதல்வரை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். அந்தச் சந்திப்பின் போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறினர்.
அண்ணா சதுக்கத்தில் இடம்: தமிழக முதல்வரிடம் அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி ஹாலில் மிக முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் பொருட்டு அதனை ஒதுக்கவும், காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கவும் கோரிக்கை வைத்தனர்.
அவர்களது கோரிக்கைகளை தமிழக முதல்வர் பரிசீலனை செய்தார். இதைத் தொடர்ந்து, கருணாநிதி மறைந்த செய்தியை அறிந்து முதல்வர் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதன் விவரம்:
ராஜாஜி ஹாலுக்கு ஒப்புதல்: மிக முக்கியப் பிரமுகர்களும், பொது மக்களும் இறுதி அஞ்சலி செலுத்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி ஹாலை ஒதுக்கீடு செய்தும், அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளைச் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
வழக்குகள் உள்ளதால்...

ஆனால், காமராஜர் சாலையிலுள்ள மெரீனா கடற்கரையில் உடல் அடக்கம் செய்வதற்கு எதிராக பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. பல சட்டச் சிக்கல்கள் இருக்கும் காரணத்தால் அந்த இடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை.
கிண்டியில் இடம் ஒதுக்கத் தயார்: அதற்குப் பதிலாக, சர்தார் வல்லபபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்துக்கு அருகே, மறைந்த கருணாநிதியின் உடல் அடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் என அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் .

இன்று அரசு விடுமுறை: ஏழு நாள் அரசு முறை துக்கம்
கருணாநிதி மறைவை முன்னிட்டு புதன்கிழமை (ஆகஸ்ட் 8) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு ஏழு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதிச் சடங்கு நடைபெறும் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 8) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும்.
ராணுவ மரியாதையுடன்...அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவும், அந்தத் தருணத்தில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடவும், கருணாநிதியின் மீது தேசியக் கொடி போர்த்தி, ராணுவ மரியாதையுடன் குண்டு முழங்க மரியாதை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சார்ந்த விழாக்கள் ரத்து செய்யப்படும். தமிழ்நாடு அரசிதழில் இரங்கல் வெளியிடப்படும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் இன்று சென்னை வருகை
திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு புதன்கிழமை வருகிறார். இதற்காக அரசு நிகழ்ச்சிகளையும், முக்கிய அலுவல்களையும் அவர் ஒத்திவைத்திருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறப்பு விமானம் மூலம் தில்லியில் இருந்து புதன்கிழமை காலை புறப்படும் பிரதமர் மோடி, அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் சென்னை வந்தடையவுள்ளார். பின்னர், நேரடியாகச் சென்று கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் அவர், அதைத் தொடர்ந்து அங்கிருந்து மாலையில் தில்லிக்கு கிளம்புகிறார்.

கருணாநிதியின் மறைவு செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் மேம்பாட்டுக்கும் அளப்பரிய பங்களிப்பை நல்கியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்


நாட்டின் முதுபெரும் தலைவரான கருணாநிதி, தமிழகத்தின் நலனுக்காக மட்டுமன்றி தேசத்தின் வளர்ச்சிக்காகவும் பங்காற்றியவர். விளிம்பு நிலை மக்களின் தலைவர் அவர். சிந்தனையாளர், படைப்பாளி, அனைத்திலும் மேலாக ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டவர் அவர்.
 பிரதமர் மோடி


கருணாநிதியின் மறைவு குறித்து அதிர்ச்சியும், ஆழ்ந்த துயரமும் அடைந்தேன். அவர் தனது ஆட்சிக் காலத்தின் போது ஏழை மக்களின் நல்வாழ்வுக்கான எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார். அவர் செய்த பணிகள் மறக்க முடியாதவை.
 ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்


கருணாநிதி தனது 14ஆவது வயதிலேயே சமூக இயக்கங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 
ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பாகும்.
 முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

முதல்வா் ஸ்டாலின் ஜன.3-இல் திண்டுக்கல் வருகை!

பனி மூட்டம்: 19 விமானங்களின் சேவைகள் ரத்து

ஆஸ்திரேலியா: போண்டி கடற்கரை தாக்குதலில் ஈடுபட்ட தந்தை-மகன் இந்திய வம்சாவளியினா்

SCROLL FOR NEXT