மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்: உயர் நீதிமன்றம்
மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை உரிய எடுக்கும் என்று நம்புவதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை: மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை உரிய எடுக்கும் என்று நம்புவதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
Advertisement
இந்நிலையில் மருத்துவர்களின் இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் வாராகி என்பவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை அவசர வழக்காக கருதி இன்றே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வாராகி சார்பில் அவரது வக்கீல் முறையிட்டார்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மனுதாரர் வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க முடியாது. எஸ்மா சட்டம் நடைமுறையிலிருப்பதால் மருத்துவர்கள் போராட முடியாது. மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
மனுதாரர் வழக்கை தனி மனுவாக தாக்கல் செய்தால் வரிசையின் அடிப்படையில் அவரது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.