தமிழ்நாடு

"தொல்லியல் எச்சங்கள் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்'

தினமணி

நகர விரிவாக்கம், தொழிற்சாலை பெருக்கம் ஆகியவற்றால் பூமிக்கடியில் புதைந்துகிடக்கும் சங்ககால வரலாற்றின், தொல்லியல் எச்சங்கள் அழிந்து வருகின்றன. அவற்றை பாதுகாத்து ஆவணப்படுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இந்திய தொல்லியல் துறை அஸ்ஸாம் மாநில கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணன்.
 உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில், தமிழர் வரலாற்றுத் தொன்மை கருத்தரங்கம், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய தொல்லியல் துறை அஸ்ஸாம் மாநில கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு, "கீழடி அகழ்வாய்வு- வைகைக் கரை நாகரிகம்' என்ற தலைப்பில் பேசியது :
 இந்தியாவில் வடமாநிலங்களில் இதுவரை 5 தொல்லியல் ஆய்வுகளும், பெங்களூருவில் ஓர் ஆய்வும் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டில் அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆய்வுகள் விரிவான அளவில் இல்லை. சங்க காலம், சங்க இலக்கியங்களில் பெருமை பெற்ற பழைமையான மதுரை நகரில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறவில்லை.
 கடந்த 2013-14-ஆம் ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வங்களா விரிகுடா வரை வைகை நதி முழுவதும் சுமார் 250 கி.மீ., தூரம் இருபுறமும் 8 கி.மீ., பரப்பளவு நாங்கள் 14 பேர் கொண்ட குழுவாகச் சென்று ஆய்வு மேற்கொண்டோம். இதில், 293 இடங்களில் தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன. அதில் ஒன்றுதான் கீழடி ஆகும்.
 கல்வெட்டு காலமான கிபி 13-ஆம் நூற்றாண்டிலும் கீழடி பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. வரலாற்று, இலக்கிய ஆராய்ச்சியிலும் இல்லை. கீழடி மக்கள் எவ்வாறு இடம்பெயர்ந்தார்கள் என்பதற்கான ஆதராமும் இல்லை. கீழடியில் செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களும், சாய தொழிற்சாலை இருந்ததற்கான ஆதாரங்களும் இருப்பதால், நகர நாகரிகத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது. கீழடியில் கிடைக்கப்பெற்ற மணலின் மூலம் வைகை நதி இந்த பகுதியில் பாய்ந்தது தெரிகிறது. பின்னர் கால ஓட்டத்தில் வைகை தனது போக்கை மாற்றிக் கொண்டதையும் அறிய முடிகிறது. இன்னும் 10 ஆண்டுகளாவது தோண்ட வேண்டிய அகழாய்வினை தற்போது முடக்கியிருப்பது வேதனை அளிக்கிறது. இந்தியாவிலேயே தொல்லியல் ஆய்வில் அதிகளவு தொல்பொருள்கள் கிடைத்திருப்பது, கீழடியில்தான். மொத்தம் 102 இடங்களில் குழி தோண்டினோம். இதில், 5,800 தொல்பொருள் எச்சங்கள் கிடைத்தன.
 நவநாகரிகமாக வாழ்ந்த மக்கள், தங்களுக்குத் தேவையில்லாதது என குப்பையில் போட்ட பொருள்கள் இன்று நமக்கு ஆதாரமாக கிடைத்துள்ளன. இதன்மூலம் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை ஏற்றுக் கொள்ள மத்திய ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லை.
 நகரப் பகுதிகளின் விரிவாக்கம், தொழிற்சாலைகளின் பெருக்கம் போன்ற காரணங்களால் அகழாய்வு செய்யப்பட்ட இடங்கள், இருந்த இடம் தெரியாமல் போகும். அங்கு கிடைக்கும் தொல்லியல் எச்சங்கள் அனைத்தும் அழிந்துபோகும் நிலை உருவாகும். எனவே, தமிழரின் இலக்கியத்தின் சிறப்பையும், பண்பாடு, நகர நாகரிக வரலாற்றையும் அறிய உதவும் தொல்லியல் எச்சங்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது என்றார் அவர்.
 கருத்தரங்குக்கு அமைப்பின் செயலர் ந.மு. தமிழ்மணி தலைமை வகித்தார். இதில், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன், வரவேற்புக்குழுத் தலைவர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், செயலர் ச. கலைச்செல்வன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் வீ. செல்வக்குமார், தொல்லியல்துறை முன்னாள் உதவி இயக்குநர் தி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT