முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 5-ஆவது கட்ட விசாரணை தொடக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 5-ஆவது கட்டமாக

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:59 AM
பகிர்:


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 5-ஆவது கட்டமாக திங்கள்கிழமை தனது விசாரணையைத் தொடங்கினார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22 மற்றும் 23-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், காயமடைந்த கீழமுடிமண் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஜஸ்டின் கடந்த சில நாள்களுக்கு முன்பு இறந்தார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, முதல்கட்ட விசாரணையை அவர் ஜூன் 4-ஆம் தேதி தொடங்கினார். பாதிக்கப்பட்டவர்களிடம் மனுக்களைப் பெற்ற அவர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் திங்கள்கிழமை தனது 5-ஆவது கட்ட விசாரணையை தொடங்கினார். உயிரிழந்த கார் ஓட்டுநர் ஜஸ்டின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலையில் உள்ள விசாரணை ஆணைய அலுவலகத்துக்குச் சென்ற அவர், ஆணையத்தில் நேரடியாக ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டவர்களில் 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டார். 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 4 பேர் மட்டுமே நேரில் ஆஜராகினர்.
தொடர்ந்து, அக்டோபர் 25-ஆம் தேதி வரை நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடியில் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும், இதற்காக 40-க்கும் மேற்பட்டோருக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.