அதிமுக எம்எல்ஏக்கள் எந்தக் காலத்திலும் விலைபோக மாட்டார்கள்: ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக எம்எல்ஏ-க்கள் எக்காலத்திலும் விலை போக மாட்டார்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிமுக எம்எல்ஏ-க்கள் எக்காலத்திலும் விலை போக மாட்டார்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அவர் வேலூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்துக்கு திங்கள்கிழமை காஞ்சிபுரம் வழியாகச் சென்றார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம்
கூறியது:
முக்கொம்பு அணை 176 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டது. முக்கொம்பு அணையையும், தமிழக அரசையும் ஸ்டாலின் ஒப்பிடுவது தவறானது. உடைந்த முக்கொம்பு அணையை தமிழக முதல்வர் உத்தரவால் விரைந்து சீர்செய்யப்பட்டது. அதோடு, புதிய அணை கட்டுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரிகாலன் கட்டிய கல்லணை ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து உறுதியாக நிற்கிறது. அதேபோல், அதிமுக அரசும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்.
கர்நாடகத்திலிருந்து திறந்துவிடப்படும் உபரிநீரைத் தேக்கி வைக்கும் திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆயிரம் ஆண்டுகளாக இதுபோன்று திறந்துவிடப்படும் உபரிநீரானது கடைமடை வரை சென்று, பின்பு கடலில் கலப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.
அதிமுக எம்எல்ஏ-க்களை எக்கட்சியாலும், எக்காலத்திலும் விலைக்கு வாங்க முடியாது. எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்பதெல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு பகல் கனவாகவே இருக்கும். எம்.ஜி.ஆரால் அஸ்திவாரம் போடப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டப்பட்ட மாளிகை அதிமுக. எவராலும் தகர்க்க முடியாத மாளிகையாகவே அது இருக்கும். உண்மைக்குப் புறம்பாக எக்கருத்தையும் நான் கூற மாட்டேன். டி.டி.வி.தினகரன் அவ்வாறு கூறினால், அதற்கான உண்மையான பதில் என்னிடமிருந்து வரும் என அவருக்கும் நன்றாகத் தெரியும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
முன்னதாக, காஞ்சிபுரம் பொன்னேரிக்கரைக்கு வருகை புரிந்த துணை முதல்வரை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, கோட்டாட்சியர் ராஜு, அதிமுக மேற்கு மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்புச் செயலர் சோமசுந்தரம், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.