தமிழ்நாடு

திமுகவினருக்கு ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கை!

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DIN

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரம்பலூரில் செயல்பட்டு வரும் அழகு நிலையத்தில் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் அங்கிருந்த பெண் ஒருவரை அத்துமீறி சரமாரியாகத் தாக்கினார். அவரை தாக்கும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலானது.  

இதையடுத்து, செல்வகுமார் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைத்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்நிலையில், இதுதொடர்பாக ஸ்டாலின் சுட்டுரையில் தெரிவித்துள்ளதாவது, 

"கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தனிப்பட்ட பிரச்சினைகள் - விருப்பு வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.கழகம் அனுமதிக்காது!

தனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என - யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன்!" என்றார். 

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் விருகம்பாக்கம் பிரியாணி கடையில் ஓசி பிரியாணி கேட்டு கடை உரிமையாளர்கள் மீது திமுக பிரமுகர்கள் தாக்குதல் நடத்தினர்.  இதையடுத்து, அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

திமுகவுக்கு அவப்பெயரை பெற்றுத் தந்த பிரியாணி கடை விவகாரம் ஓய்ந்து சில நாட்களே ஆகிய நிலையில் தற்போது அழகு நிலையம் விவகாரம் நடைபெற்றிருப்பது கட்சிக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

அதன் காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளுக்கு இந்த கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT