தமிழ்நாடு

அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களின் வேலை இது: வருமான வரித்துறை சோதனை குறித்து சீறிய துரைமுருகன்   

DIN

வேலூர்: அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களின் வேலை இது என்று தன் வீட்டிலும், கல்வி நிறுவனங்களிலும் நடத்தப்பட்டுள்ள வருமான வரித்துறை சோதனை குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.   

திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருமான டி.எம்.கதிர்ஆனந்த் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகள், பள்ளி, கல்லூரியில் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை மாலை வரை சோதனை நடத்தினர்.

அதேபோல துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை வளாகத்தில் திங்கள் காலை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியதாக தகவல் வெளியானது. 

தொடர்ந்து துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர் அலி வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், துரைமுருகனின் நண்பர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ஏற்கனவே வருமானவரி சோதனை நடந்து வரும் நிலையில் விருதம்பட்டு வஞ்சூரில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் பெருமாள் வீட்டிலும் வருமானவரி சோதனையில் ஈடுபட்டனர். 

வேலூரில் உள்ள சிமெண்ட் குடோனில் சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள், துணிப் பைகள் ஆகியவற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி ரூபாய் அளவுக்கு கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களால் வைரலாகப் பரவி வருகின்றன.

இந்நிலையில் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களின் வேலை இது என்று வருமான வரித்துறை சோதனை குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.   

இதுதொடர்பாக திங்கள் இரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

வருமானவரித் துறை எங்கள் வீடு, கல்லூரி, பள்ளியில் சோதனை நடத்தினார்கள். எங்களுக்கு தொடர்பில்லை என்றதும் சென்று விட்டார்கள். எங்களை மரியாதைக்குறைவாக எதுவும் நடத்தவில்லை. எதையும்  கைப்பற்றவில்லை. திமுகவை எப்படியாவது முடக்க  நினைத்தாலும் எங்களின் தொண்டர்கள் எங்களுக்கு எப்போதும் துணை இருப்பார்கள்.

இந்த வருமான வரித்துறை சோதனை எனபது முழுக்க அரசியல்தான். பழிவாங்கும் நடவடிக்கைதான். இதன்மூலம் திமுகவை முடக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதற்கு மக்களின் ரியாக்ஷன் எப்படியிருக்கும் என்று அவர்கள் யோசிக்கவில்லை. அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களின் வேலை இது.

துரைமுருகன் திமுக பொருளாளர், பெரிய புள்ளி என்பதால் அவரை முடக்கி      பயமுறுத்தலாம்  என்று பார்க்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்றவுடன் திமுக தலைவர் தொடர்பு கொண்டு விசாரித்தார்.

எனது மகனை மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் முடக்கியுளார்கள். அதுதான் அவர்களது ஆசை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT